சிலியில் நடைபெறவுள்ள 17 வயதின் கீழ் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் மத்தியஸ்தராக செயற்படும் அரிய வாய்ப்பு இலங்கையின் டிலான் பெரேராவுக்கு கிடைத்துள்ளது.
ஆசிய பிராந்தியத்திலிருந்து தெரிவான நால்வரில் இலங்கையின் களுத்துறையைச் சேர்ந்த டிலான் பெரேராவும் ஒருவராவார்.உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் இலங்கையினால் பங்குபற்ற முடியுமா என்ற கேள்வி தொடரும் நிலையில் இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு 17 வயதின் கீழ் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் மத்தியஸ்தம் வகிக்க சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளனம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளமை பெரிய விடயமாகும்.
17 வயதின் கீழ் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் இம் மாதம் 17ஆம் திகதி முதல் நவம்பர் 8ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன. ஆசியாவில் அதி சிறந்த மத்தியஸ்தர்களாக இனங்காணப்பட்டுள்ள 100 மத்தியஸ்தர்கள் மத்தியில் நடத்தப்பட்ட தேர்வுகளின் பின்னர் தெரிவான நால்வரில் ஒருவராக டிலான் பெரராவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தமை இலங்கைக்கு கிடைத்த பெருமையாகும்.
அவுஸ்திரேலியாவில் இவ் வருட முற்பகுதியில் நடைபெற்ற ஆசிய கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளிலும் டிலான் பெரேரா மத்தியஸ்தராக கடமையாற்றியிருந்தார்.
22 வயதுக்குட்பட்ட ஆசிய கால்பந்தாட்ட வல்லவர் போட்டிகளில் கால் இறுதி மற்றும் இறுதி ஆட்டம், 19 வயதுக்குட்பட்ட ஆசிய கால்பந்தாட்ட வல்லவர் போட்டிகளில் இறுதி ஆட்டம், ஆசிய சம்பியன்ஸ் லீக் முன்னோடி கால் இறுதி ஆட்டம், அங்குரார்ப்பண இண்டியன் சுப்பர் லீக் போட்டிகள் ஆகியவற்றிலும் டிலான் பெரேரா மத்தியஸ்தராக பணியாற்றியுள்ளார்.
ஆசிய கிண்ண கால்பந்தாட்டம் மற்றும் ஃபீஃபா 17 வயதின்கீழ் உலகக் கிண்ணம் ஆகிய போட்டிகளில் மத்தியஸ்தம் வகிப்பதற்கு இலங்கையிலிருந்து தெரிவான முதலாமவர் இவராவார். இதற்கு முன்னர் பிரான்ஸ் 1998 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் பதுளையைச் சேர்ந்த நிமால் விக்ரமதுங்க உதவி மத்தியஸ்தராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.டிலான் பெரேரா கடந்த சனிக்கிழமை சிலி சென்றடைந்தார்.