நெதர்லாந்தில் ஆசிரியை ஒருவர் மாணவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும்படி வினோதமான முறையில் உயிரியல் பாடம் எடுத்துள்ளார்.
நெதர்லாந்தின் க்ரோயன் ஹார்ட் ரிஜ்ன்வூட் என்ற பள்ளியில், டெபி என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக உயிரியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தனது இளமையான யோசனையால் மாணவர்களின் மனதைத் தொட்டிருக்கின்றார்.
இவர் ஒரு நாள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மனித உடற்பாகங்கள் சம்பந்தப்பட்ட பாடம் நடத்திக்கொண்டிருக்கையில் இவருக்கு வித்தியாசமான ஒரு யோசனை தோன்றியுள்ளது.
அதாவது தனது நகரில் எலும்புக்கூடைப்போல வடிவமைக்கப்பட்ட ஆடைகளை பெண்கள் அணிந்துபோவதை, டெபி என்ற குறித்த ஆசிரியை அவ்வப்போது கவனித்திருக்கிறார்.
இதைப் பயன்படுத்தி தமது மாணவர்களுக்கு உயிரியல் பாடம் எடுக்க விரும்பிய டெபி, தனது இத்தகைய யோசனையை கல்லூரி அதிபரிடம் கூறி அனுமதியும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஒரு நாள் மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருக்கையில், திடீரென மேசை மேல் ஏறிநின்று கொண்டு தான் அணிந்திருந்த ஆடைகளை களைந்துள்ளார்.
அதிர்ச்சியுடன் அவரைக் கவனித்து வந்த மாணவர்கள் அந்த உடைக்குள் அவர் அணிந்திருந்த எலும்புக்கூடு மற்றும் உடல் உறுப்புகள் சார்ந்த உடைகளைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
இதன் பின்னர் தான் அணிந்திருந்த ஆடைகளில் வடிவமைக்கப்பட்ட பாகங்களை ஒவ்வொன்றாக, மாணவர்களுக்கு டெபி விளக்கியுள்ளார்.
இதனை வீடியோவாகப் பதிவு செய்து பள்ளி நிர்வாகம் தமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டது.