தற்போதைய நீதியமைச்சர் அரசியல் கைதிகள் என்ற வகையில் சிறைகளில் யாருமில்லை. எல்லோருமே குற்றவாளிகள் தான் என்று கூறுவதை வன்மையாக கண்டிக்கிறோம். சகல அரசியல் கைதிகளுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுவிக்கவேண்டும் என்று யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமாகிய மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
14 சிறைகளில் 217 கைதிகள் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்றுமுன்தினம் முதல் ஈடுபட்டுள்ளமை குறித்தும் இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவருமில்லை என்ற நீதியமைச்சர் விஜேதாஸவின் கருத்து தொடர்பாகவும் கேட்டபோதே மாவை சேனாதிராசா எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
நீதியமைச்சர் விஜேதாஸவின் கருத்து பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது. சிறையிலிருக்கும் அனைத்து கைதிகளையும் விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற பழைமையான கருத்தை நீதியமைச்சர் கொண்டிருக்கிறார். இது உண்மைக்கு புறம்பான நியாயமாகும்.
நீதியமைச்சரின் கூற்றுப்படி பார்த்தாலும் விடுதலைப் புலிகளோடு சம்பந்தப்பட்டவர்கள் என்று கருதினாலும் அது அரசியல் என்றே கருதப்பட வேண்டும். விடுதலைப்புலிகளை அழைத்து அரசாங்கமே பல்வேறு சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. சர்வதேசமும் இதனை நடத்தியுள்ளது.
அப்படியிருக்கும் போது ஒரு குறிப்பிட்ட தொகுதி இளைஞர்களை குற்றவாளிகள் என்று கூறுவது பொருத்தமற்ற விடயமாகும்.
அக்காலத்தில் பொலிஸாருக்கும் இராணுவத்துக்கும் இருந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி வேண்டுமென்றே இந்த இளைஞர்கள் நீண்டகாலமாக சிறையில் அடைத்து வைத்திருப்பது மிகவும் கொடூரமானது. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னும் இது நீடிப்பது அநீதியானது. ஜனாதிபதியும், பிரதமரும் சிறையில்வாடும் இளைஞர்கள் விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும்.
ஜனாதிபதி ஒருவரால் மட்டுமே அந்த பொது மன்னிப்பு வழங்க முடியும். ஏலவே ஆயுதம் தாங்கிப் போராடிய ஜே.வி.பி.யினருக்கு ஆயிரம் ஆயிரமாக பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனபடியால் ஜனாதிபதி ஆட்சிபீடம் ஏறியது தமிழ், முஸ்லிம் மலையக மக்களின் வாக்குப்பலத்தினால் என்பதை நினைவில் கொண்டு அதிலும் வட, கிழக்கு மக்கள் குறித்த ஆட்சிமாற்றத்துக்கு காத்திரமான பங்களிப்பு செய்துள்ளார்கள் என்ற நன்றியுணர்வை மனதில் கொண்டு சிறையில் வாடும் அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமெனக்கேட்டுக் கொள்கிறோம்.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பெண்கள் உட்பட சிறையில் அரசியல் கைதிகளாக வழக்கு விசாரணைகள் இல்லாமல் உயர்வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டும் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டவர்களுமாக 243 கைதிகள் 14 சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நாம் பல முறை சந்தித்து உரையாடியுள்ளோம். அவர்களது விபரங்கள் எமக்குத் தரப்பட்டு முன்னைய அரசாங்கத்துடனும் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதியுடனும் மற்றும் சட்ட மா அதிபர் காரியாலயத்துடனும் பேசியுள்ளோம்.
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சார் பில் வழக்கறிஞர்கள் சிறைச்சாலைகளுக்கு சென்று கைதிகளை விசாரணை செய்து மதிப்பீட்டறிக்கையொன்று அரசாங்கத்திடம் கையளித்ததையும் நாம் அறிவோம். இதுவிடயமாக சிறைக்கைதிகள் எத்தனையோ முறை பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்கள். தற்பொழுது அந்த சிறைக் கைதிகள் தமது உயிரை பண யம் வைத்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள். அவர்களின் இந்தப் போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பலமான ஆதரவை வழங்குகிறது.
ஆட்சிமாற்றத்துக்குப் பின்னுள்ள இந்த அரசாங்கம் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றதற்குப் பின்னும் நாங்கள் தலைவர் சம்பந்தன் தலைமையில் சென்று சிறையிலுள்ள கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் 20 வருடங்கள் கழிந்த நிலையில் அவர்களை சிறையில் வைத்திருப்பதற்கு எவ்வகையான நியாயமும் இல்லை.
நீதிமன்றம் இனி குற்றவாளிகளாக கண்டாலும் அவர்கள் 20 வருடத்துக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து விட்டார்கள். ஆகையால் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். குறிப்பாக சொல்லப் போனால் வழக்குகள் பதிவு செய்யப்படாமலே 20 வருடங்களுக்கு மேல் தமது வாழ்வை சிறையில் கழித்து விட்டார்கள். எக்குற்றமும் பதிவு செய்யப்படாமல் குற்றமற்றவர்கள் கூட விடுதலை செய்யப்படாமல் சிறையில் உள்ளனர். இப்படியிருக்கும் நிலையில் அவர்கள் தொடர்ந்தும் சிறையில் வாடு வது அநீதியாகும். மரணதண்டனை விதிக் கப்பட்டவர்கள் கூட 20 வருடம் கழிந்த பின் விடுவிக்கப்படுகிறார்கள்.
எனவே, தீர்ப்பை வழங்கி அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். அல்லது பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என மாவை குறிப்பிட்டார்.