தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சட்ட மா அதிபரை உள்ளடக்கிய உயர்மட்டக் கூட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ, சட்டமும் ஒழுங்கு சிறைச்சாலைகள் அமைச்சர் திலக் மாரப்பன, தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன், மீள்குடியேற்ற அமைச் சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
இதற்கான தீர்மானம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பிரிவினர் விசாரணைக் கைதிகளாகவும் பிறிதொரு பிரிவினர் தண்டனைக் கைதிகளாகவும் தமது வாழ்நாளில் கணிசமான பகுதியை சிறைகளில் கழித்து வருகின்றனர். இவர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆட்சியில் நிலவிய நிலைமை இந்த நல்லாட்சியிலும் நிலவுவதை அனுமதிக்கக் கூடாது என்று அமைச்சர் மனோ கணேசன் அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர், நீதியமைச்சர், சிறைச்சாலைகள் அமைச்சர் ஆகியோர் இவ்விடயம் தொடர்பில் சட்ட மா அதிபருடன் ஆலோசித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
கைதிகள் விவகாரம் தொடர்பில் எனது தலைமையில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ, சிறைச்சாலைகள் அமைச்சர் திலக் மாரப்பன, தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன், மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோரை உள்ளடக்கிய குழு சட்ட மா அதிபரை அழைத்து கலந்துரையாடி இப்பிரச்சினையை மேலும் நீடிக்க விடாது முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என்று இங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்துத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாளை (இன்று) சிங்கப்பூர் பயணத்தை மேற்கொள்வதனால் அங்கு சென்று திரும்பிய பின்னர் 20ஆம் திகதி இது தொடர்பான முதற்கூட்டத்தினை நடத்துவோம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவையின் இந்த முடிவு குறித்து உண்ணாவிரதத்தில் ஈடுபடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு அமைச்சர் மனோ கணேசன் அறிவிப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது.