தமிழகத்தில் குடிபழக்கத்துக்கு அடிமையான தனது கணவரை திருத்த நினைத்த பெண்மணி ஒருவர் மதுபாருக்குள் நுழைந்து போராட்டம் நடத்தியுள்ளார். கோவை கணபதி நகர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஜெயக்குமார் தினமும் குடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.
சம்பள பணத்தில் பெரும்பகுதியை குடித்து அழித்ததோடு, தினமும் தகராறும் செய்து வந்ததால் அவரது மனைவி லில்லி மிகவும் சிரமப்பட்டுள்ளார். குடிபழக்கத்தை கைவிடுமாறு எவ்வளவு கெஞ்சியும் ஜெயக்குமார் கேட்காத நிலையில் தான், லில்லி அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளார்.
நேற்று காலை 11 மணியளவில் கணவர் தினமும் மது அருந்தும் அத்திப்பாளையம் அருகே உள்ள மதுபாருக்கு சென்ற லில்லி, உள்ளே சென்று அமர்ந்து கொண்டார்.
மதுபாருக்குள் திடீரென்று ஒரு பெண் வந்து அமர்ந்ததால் அங்கு குடித்து கொண்டிருந்த ஆண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அவர்கள் லில்லியை வெளியே போக சொல்லியபோது, எனது கணவர் இங்கேதான் தினமும் மது குடிக்கிறார். நானும் அவருடன் சேர்ந்து மது குடிக்கப் போகிறேன் என லில்லி தெரிவித்துள்ளார்.இந்நிலையில் ஜெயக்குமார் பாரின் உள்ளே தனது மனைவி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, இங்கே ஏன் வந்தாய்? என மனைவியை திட்டியுள்ளார்.
அதற்கு லில்லி, எனக்கும் சேர்த்து மது வாங்குங்கள் இருவரும் சேர்ந்து மது குடிப்போம் என்று பதிலளித்துள்ளார். இதையடுத்து ஜெயக்குமார் மனைவியை சமானதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து போக முயன்ற போது, முடிவு தெரியாமல் போக மாட்டேன் என்று லில்லி செல்ல மறுத்துள்ளார்.
பின்னர், மதுக்கடையில் கணவன் மனைவியிடையே தகராறு நடப்பதை அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்துள்ளனர்.லில்லி பொலிசாரிடம், என் கணவர் மது குடிப்பதை நிறுத்தும்படி பல முறை கூறியும் அவர் கேட்கவில்லை.
இதனால்தான் இது போன்று நடந்து கொண்டதாக லில்லி கூறியதை அடுத்து பொலிசார் ஜெயக்குமாரை கண்டித்துவிட்டு இருவரையும் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். மேலும், எனது கணவர் மீண்டும் மது குடித்தால், நான் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று லில்லி பொலிசாரிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.