போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனை என்பன சகல நாடுகளிலும் காணப்படும் பொதுப் பிரச்சினையாகும். சகலரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே அவற்றை ஒழிக்க முடியும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திர வலயத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் பங்குகொள்ளும் மூன்று நாள் உயர் மட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனை என்பது சகல நாடுகளிலும் காணப்படும் பொதுப் பிரச்சினையாகும். அந்தவகையில் எமது நாட்டில் குறிப்பிட்ட இந்த பிரச்சினையானது பரந்தளவில் காணப்படுகின்றது.
2009 ஆம் ஆண்டிலிருந்து கடல் வழியைப் பயன்படுத்திக் கொள்கலன்கள் மூலம் போதைப் பொருட்கள் கடத்திச் செல்லும் வீதம் அதிகரித்து காணப்படுவதை ஐக்கிய நாடுகள் போதைப் பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இது போன்ற மிகப் பெரிய சவாலை முறியடிக்க அனைவரும் கூட்டாகவும் ஒன்றுபட்டும் செயற்பட முன்வர வேண்டும். அத்துடன் நாடுகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றங்கள், கூட்டுப் பயிற்சி தகவல் பரிமாறல் போன்றன மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
இலங்கையை பொறுத்த மட்டிலும் இது ஒரு பாரிய சவாலாகும். இவற்றை முற்றாக முறியடிக்க வேண்டியது சட்டத்தை அமுலாக்கம் செய்யும் அனைத்து தரப்பினர்களினதும் கடமையாகும்.எமது நாட்டில் போதைப்பொருள் பாவனையை முற்றாக முறியடிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்து அவற்றுக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றார்.
அதேபோன்று இது தொடர்பில் ஆராய விசேட ஜனாதிபதி செயலணி ஒன்றையும் உருவாக்கியுள்ளார். இளைஞர்கள், மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பிரபல கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவை விசேட தூதுவராக நியமித்துள்ளார்.
எனவே போதைப்பொருள் இல்லாத நாடொன்றை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.