தமிழ் அரசியல் கைதிகளை நவம்பர் 7ம் திகதியில் இருந்து கட்டம் கட்டமாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் வெளியிட்டுள்ள உறுதி மொழியை ஏற்கமாட்டோம் என தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் மாதம் 7ம் திகதி முதல் தமிழ் அரசியல் கைதிகள் கட்டம் கட்டமாக விடுதலை செய்யபடவுள்ளதாக ஜனாதிபதியின் உறுதி மொழியினை நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனிடம் வழங்கியுள்ளதாக தமிழ் அரசியல் கைதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதன் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதனை தாம் ஏற்க முடியாது என அவர்கள் நிராகரித்துள்ளனர்.
இன்று(16) நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிமலநாதன் மற்றும் சட்டத்தரணிகளான அன்ரன் புனிதநாயகம்,திருச்செல்வம் திருஅருள் ஆகியோர் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சென்று அவர்களின் நிலை தொடர்பாக பார்வையிட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை தொடர்பாக கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் அரசியல் கைதிகளின் நிலை மிக மோசமாக மாறிவருகிறது.
இன்று 5 வது நாளாக நாட்டின் 14 சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமக்கு விடுதலை கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறு குற்றச் சாட்டுக்கள் மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அப்பாவித் தமிழர்கள் இவ்வாறு பல வருடங்களாக சிறைகளில் மனிதாபிமானமற்ற முறையில் தடுத்துவைக்கபட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் குறித்த நடவடிக்கை நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
இவர்களின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி நம்பிக்கை ஊட்டும் வகையில் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு நல்லாட்சியின் உண்மை தன்மையினை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த அரசாங்கம் முன்மாதிரியாக செயற்பட்டு சிறைகளில் பல வருடங்களாக விசாரணைகள் எதுவுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனிடம் நான் கேட்டபோது சிறைகளில் அடைக்கபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அடுத்த மாதம் 7ம் திகதி முதல் கட்டம் கட்டமாக விடுதலை செய்யவுள்ளதாக ஜனாதிபதியின் உறுதிமொழியினை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் அக்கருத்தை ஏற்றுகொள்ளவில்லை என்று தெரிவித்ததுடன், தமது விடுதலை தொடர்பாக ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து நம்பிக்கை ஊட்டும் வகையில் விடுதலைக்கான உறுதிமொழியினை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தமிழ் அரசியல் கைதிகள் மேலும் ஒரு கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் இணைந்து ஜனாதிபதியை சந்தித்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அழுத்தம் கொடுக்கவேண்டும் என கோரியுள்ளனர்.
எனினும் அது நடைபெறாத பட்சத்தில் வட மாகாண முதல்வர் உட்பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து கொழும்பில் அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து தமது விடுதலைக்காக ஒத்துழைப்பு வழங்கும்படி கோரியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.