ஆண்கள் கிரிக்கெட் அணியில் இங்கிலாந்து வீராங்கனை!!

465

Eng`

வரலாற்றில் முதன்முறையாக அவுஸ்திரேலியாவில் நடக்கும் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை ஒருவர் கலந்துக்கொண்டு விளையாட உள்ளார்.

அவுஸ்திரேலியாவின் வடக்கு மாவட்டங்கள் கிளப்- போர்ட் அடிலெய்டு அணிகள் மோதும் இரு நாள் போட்டி இன்று தொடங்குகிறது.

இதில் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் சாரா டெய்லர், வடக்கு மாவட்டங்கள் கிளப் அணிக்காக விளையாடுகிறார்.



கடந்த 1987ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆண்கள் அணியில் இணைந்து பெண் ஒருவர் விளையாடுவது இதுவே முதன்முறையாகும்.

இது பற்றி சாரா டெய்லர் கூறுகையில், “பதற்றமாகவும், அதே சமயம் உற்சாகமாகவும் இருக்கிறது. நான் கிரிக்கெட்டில் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தப் போட்டியில் பந்து அதிக வேகமாகவும், அதிக பவுன்சராகவும் வரும். அதை சமாளிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் களமிறங்கியுள்ளேன். மேலும், வீரர்கள் என்னை மற்ற வீரர்களைப் போன்று பார்த்து வாய்மொழி துஷ்பிரயோகம் செய்தால் கூட நான் மரியாதையாக ஏற்றுக் கொள்வேன்” என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 8 டெஸ்ட், 98 ஒருநாள் மற்றும் 73 T 20 போட்டிகளில் விளையாடி உள்ள சாரா, கடந்த வருடத்தில் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதையும் வென்றுள்ளார்.