30 ஆயிரம் அடி உயரத்தில் பிறந்த அதிசயக் குழந்தை!!(வீடியோ)

871

Baby

தைவான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சுமார் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் வைத்து குழந்தை பிறந்துள்ளது.

தைவான் நாட்டில் இருந்து அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சீன விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது.
சுமார் 19 மணி நேரம் பயணிக்கக்கூடிய இந்த விமானத்தில் நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவரும் பயணம் செய்துள்ளார்.

அந்த விமானம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பசிபிக் பெருங்கடலின்மீது பறந்து கொண்டிருந்தபோது அந்தப் பெண்ணுக்கு திடீர் என வயிற்றுவலி ஏற்பட்டதாக விமானப் பணிப்பெண்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பெண்ணின் அதிர்ஷடவசமாக அதே விமானத்தில் ஏஞ்சலிகா ஸென் என்ற ஒரு பெண் டாக்டரும் பயணம் செய்துள்ளார்.

புதிதாக திருமணமான அவர் தேனிலவு கொண்டாடிவிட்டு சொந்த ஊரான அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு தனது கணவருடன் அந்த விமானத்தில் திரும்பிக்கொண்டிருந்தார்.

வலியால் துடித்துக் கொண்டிருந்த தைவான் நாட்டுப் பெண்ணை பரிசோதித்துப் பார்த்த பின்னர், சுற்றிலும் விமானப்பணிப் பெண்கள் திரை விரித்து பிடித்திருக்க, அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு சுகப்பிரசவ முறையில் குழந்தை பிறந்தது.

பின்னர், அலாஸ்கா விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட விமானி, அவசரமாக அங்கே விமானத்தை தரையிறக்கினார்.

அலாஸ்கா விமான நிலையத்தில் தயாராக காத்திருந்த அம்புலன்ஸ் மூலமாக அந்தப் பெண்ணும் குழந்தையும் அலாஸ்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்தப் பிரசவம் நிகழ்ந்த வேளையில் அந்த விமானம் அலாஸ்கா நகரின் வான்வெளியில்தான் பறந்துகொண்டிருந்ததா என்பது தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஏதும் வெளியாகவில்லை.

அவ்வாறு உறுதிசெய்யப்பட்டால், அந்த குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமையும் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.