
ராஜ்கோட்டில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய மில்லர் – டி கொக் ஜோடி இந்தியப் பந்துவீச்சை மிக எளிதாக எதிர்கொண்டது. 72 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மில்லர் 33 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து அம்லாவும் 5 ஓட்டங்களுடன் வீழ்ந்தார்.
அடுத்து ஜோடி சேர்ந்த டி கொக் – ப்ளெஸ்ஸி ஜோடி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சீரான வேகத்தில் ஓட்டங்கள் சேர, ஒரு முனையில் பெள்ஸ்ஸி அரை சதமும், மறு முனையில் டி கொக் சதத்தையும் கடந்தனர்.
முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 270 ஓட்டங்களை தென்னாபிரிக்க அணி எடுத்தது.
இந்தியா தரப்பில் அக்சர் படேல், ஹர்பஜன், மிஷ்ரா என சுழற்பந்து வீச்சாளர்கள் மூவருமே கட்டுப்பாடான பந்துவீச்சில் அசத்தினர்.
இதையடுத்து 271 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
ஆரம்ப ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் தவான் களமிறங்கினர். தவான் 13 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ரோகித் சர்மாவுடன் இணைந்த விராத் கோஹ்லி பொறுப்புடன் விளையாடினார். இருவரும் தென்னாபிரிக்க வீரர்களின் பந்துவீச்சை சிறப்பாக சமாளித்து ஆடினர்.
இதனால் இந்திய அணியின் எண்ணிக்கை சிராக உயர்ந்தது.
இதனிடையே 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 65 ஓட்டங்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா டுமினி வீசிய பந்தில் அவரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
அப்போது இந்திய அணி 113 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய டோனி வீக்கெட் வீழ்வதை தடுக்கும் வகையில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் டோனி- விராத் கொஹ்லி இணையின் ஆட்டத்தின் போது ஓட்டத்தின் எண்ணிக்கை குறைந்துபோனது. இதனிடையே டோனி 47 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரெய்னா ரகானே ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
ஓரளவு நிலைத்து ஆடிய கோஹ்லி மட்டும் அரை சதம் கடந்து 77 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 252 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தென்னாபிரிக்க அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த அணியின் மொர்னே மோர்கல் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.





