ஐ.நா தீர்மானம் எதிர்பார்த்த அளவு இல்லையென்றாலும் ஒன்றுபட்டு செயற்படுத்த வேண்டும்! சிவசக்தி ஆனந்தன்!

465
10462375_1497848127178059_4088882850332594407_n
ஐ.நா தீர்மானம் நாம் எதிர்பர்த்த அளவு இல்லை என்றாலும் நாங்கள் ஒன்று பட்டு அதனை செயற்படுத்த வேண்டியவர்களாக உள்ளோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, ஓமந்தை வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினருக்கான கௌரவிப்பு நிகழ்வின் போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வன்னி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்துள்ளீர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக வாக்களித்த நீங்கள் பல பிரச்சனைகளுடனேயே இன்றும் வாழ்கின்றீர்கள் என்பது எமக்கு தெரியும்.

இப் பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிரந்தர வீடுகள், மலசலகூடம், போக்குவரத்து வீதிகள் என பல இன்னும் கிடைக்கவில்லை.



யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் கூட சரியான முறையில் வழங்கப்படவில்லை. அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரும் சில அதிகாரிகளும் இணைந்து அவற்றை தவறான முறையில் வழங்கியுள்ளனர். இங்கு அதிகார துஸ்பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

தற்போது புதிய அரசாங்கம் வந்திருக்கின்றது. மைத்திரிபால சிறிசேன  தற்போது ஜனாதிபதியாக இருப்பதற்கு தமிழ் மக்களினுடைய வாக்குகளே காரணம்.

அதன் பின் நாடாளுமன்றத் தேர்தல் கூட மாற்றங்களை தந்துள்ளது. இந்த இரண்டு தேர்தல்களும் இலங்கை அரசியலில் ஒரு மாற்றத்தை, திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 30 வருட போராட்டத்தில் நாம் ஆயிரக்கணக்கான போராளிகள், பொதுமக்கள், கோடிக்கணக்கான சொத்துக்கள் என்பவற்றை இழந்துள்ளோம்.

இந்த தியாகங்கள் தான் ஐ.நா சபையிலே தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களது உரிமைகள் மீறப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஐ.நாவின் கதைவைத் தட்டியுள்ளது.

ஆகவே ஐ.நா சபையினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நாங்கள் எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும் அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இந்த அநீதிகளுக்கு எதிராக ஒரு சர்வதேச விசாரணை வேண்டும் என நாங்கள் எதிர்பார்த்தோம். அது வரவில்லை. இரண்டாம் கட்டமாக ஒரு கலப்பு விசாரணையை எதிர்பார்த்தோம் அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

தற்சமயம் ஒரு உள்ளக விசாரணை வந்துள்ளது. அதுவும் ஒரு சில பொதுநலவாய நாடுகளினுடைய நீதிபதிகள், சட்டத்தரணிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் அது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

காணாமல் போனவர்கள் விடயம், அரசியல்கைதிகள், வாழ்வாதாரப் பிரச்சினை, நிரந்தரமான குடியேற்றம் என அனைத்தையும் நாம் பெறுவதற்கான ஒரு சந்தர்பம் இந்த தீர்மானம். அது நடைமுறைப்படுத்தப்படுவதில் இருந்து தான் நாம் இவற்றைப் பெற முடியும்.

ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் நானும் கலந்து கொண்டேன். அங்கு இனவாதிகள் பலர் போரில் ஈடுபட்டு கொடூரமாக செயற்பட்ட அரசியல்வாதிகள், இராணுவத்தை காப்பாற்றுவது தொடர்பாக பேசினர்.

ஆனால் ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு இருக்கிறது. அவர்கள் அதனை செய்ய வேண்டும். அதனையே நாம் வலியுறுத்துகின்றோம்.

இது தவிர, புதிய வரவு செலவுத் திட்டம் வரவிருக்கிறது. அதில் எமது போரால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். நிதி அமைச்சர் கூட இந்த வரவு செலவுத் திட்டம் ஒரு புரட்சிகரமான வரவு செலவுத் திட்டம் என கூறியுள்ளார்.

எனவே எமது மக்களின் தேவைகளை இந்த மாற்றங்களின் பின் மாகாணசபையும், நாங்களும் இணைந்து பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும் என கருதுகின்றேன் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது வவுனியா வடக்கில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.பி.நடராஜ், இ.இந்திராசா, ம.தியாகராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.