தனியார் துறையினரின் சம்பளத்தை இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாவால் அதிகரிப்பதற்கு அவசரமாக நடவடிக்கை எடுப்பதாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார்.
தேசிய தொழில் பாதுகாப்பு வாரத்தையொட்டி தொழில் திணைக்களத்தால் நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்..
அரச ஊழியர்களுக்கு கடந்த கால கட்டங்களில் பல சந்தர்ப்பங்களில் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டபோதும் தனியார் துறையினருக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
இதனால் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமையால் அவர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்.
தனியார் துறையினரின் சம்பளத்தை 2500 ரூபாவால் அதிகரிக்குமாறு தனியார் துறையினரிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தபோதும் அது சாத்தியமாகவில்லை. தனியார் துறையின் சில நிறுவனங்கள் மாத்திரம்தான் அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டன.
இதன் அடிப்படையில் சில முதலாளிமார் 1000 ரூபாவினாலும் மேலும் சில நிறுவனங்கள் 500 ரூபாவினாலும் சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுத்துள்ளனர்.
ஆகையினால் விசேட சட்டமூலம் ஒன்றின் மூலம் இந்த சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். அதேபோன்று தனியார் துறையினரின் அடிப்படைச் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவாக நிர்ணயிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகின்றோம் என்றார்.