தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களை மிரட்ட காத்திருக்கும் இந்திய அணி- ரோட்ஸ் எச்சரிக்கை!!

725

jonty

இந்திய கிரிக்கெட் வீரர்கள் வேகப் பந்து வீச்சை சந்திக்க பயப்படுவதே இல்லை என்று புகழாரம் சூட்டியுள்ளார் முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரரான ஜொன்டி ரோட்ஸ். களத்தடுப்பில் பிரபலமானவர் ரோட்ஸ்.

இந்த நிலையில் அவர் இந்திய வீரர்களின் துடுப்பாட்ட திறமையை புகழ்ந்து பேசியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடவுள்ள நிலையில் வேகப் பந்து வீச்சுக்கு பிரபலமான தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் இந்தியர்கள் திறமையாக விளையாடுவார்கள் என்றும் கணித்துள்ளார் ரோட்ஸ். இதுகுறித்து தெரிவித்த அவர்..

இந்திய துடுப்பாட்ட வீரர்கள் தென் ஆப்பிரிக்காவின் வேகப் பந்து வீச்சை திறம்பட சமாளிக்கும் திறமையுடன் உள்ளனர். குறிப்பாக டேல் ஸ்டெயின் பந்து வீச்சை அவர்கள் எளிதாக சமாளிக்க முடியும்.
ஐபிஎல் போட்டிகளில் இந்திய வீரர்கள் தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய வீரர்களுடன் இணைந்தும் எதிராகவும் விளையாடியது நல்ல அனுபவம் கொடுக்கும்.

இந்திய வீரர்கள் இப்போதெல்லாம் வேகப் பந்து வீச்சைக் கண்டு பயப்படுவதாக தெரியவில்லை. அவர்களுக்குள் அதிக அளவில் நம்பிக்கை உள்ளது. அவர்களிடம் நல்ல திறமை உள்ளது.

ஸ்டெயின் நல்ல வேகமான பந்து வீச்சாளர்தான். ஆனால் அவரால் இந்திய வீரர்களை பெரிய அளவில் மிரட்ட முடியாது என்பது எனது கருத்து. பிலன்டரும் அதிவேகமாகவே பந்து வீசுகிறார். ஆனாலும் அவரையும் இந்திய வீரர்களால் சமாளிக்க முடியும். மோர்னி மோர்க்கலுக்கு நன்றாக பவுன்ஸ் வரும். ஆனால் இந்த வித்தியாசமான பந்து வீச்சாளர்களை இந்திய வீரர்கள் எளிதாக சமாளிப்பார்கள்.

தற்போதைய இந்திய வீரர்களைப் பார்க்கும்போது தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை தவிடுபொடியாக்கி விடுவார்களோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது என்றார் ரோட்ஸ்.

டிசம்பர் 26-ம் தேதி முதல் ஜனவரி 19-ம் தேதி வரை 3 டெஸ்ட் போட்டிகளில் டேபன், கேப்டவுன், ஜோஹன்னஸ்பெர்க் ஆகிய நகரங்களில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் விளையாடவுள்ளன.

ரோட்ஸ் மேலும் கூறுகையில் விராத் கோஹ்லி இந்திய வீரர்களிலேயே மிகவும் அபாயகரமானவராக தெரிகிறார். அதேபோல தலைவர் டோணியும் அபாயகரமானவர்தான். இருவரும் சேர்ந்து தென் ஆப்பிரிக்க வீரர்களை தூங்க விடாமல் செய்யப் போகிறார்கள்.

குறிப்பாக விராத் கோஹ்லி துரிதமாக ரன் சேர்க்கிறார். ரன் எடுப்பதில் வேகம் காட்டுகிறார். அதேபோல தலைவர் டோணியும் ஆட்டத்தை முடித்து வைப்பதில் சிறப்பாக செயல்படுகிறார். ஆட ஆரம்பித்து விட்டால் அவரை நிறுத்துவது மிகக் கடினம். எந்தப் பந்து வந்தாலும் அடித்து ஆடுகிறார்.

இவர்கள் மட்டுமா ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா ஆகியோரும் சிறப்பான நிலையில் உள்ளவர்கள் என்றார் ரோட்ஸ்.

ரோட்ஸ் சொன்னவை பலிக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.