அஜித் பற்றி எனது பெயரில் அவதூறு : கமிஷனர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்!!

395

Karunas

நடிகர் அஜித்குமார் பற்றி நகைச்சுவை நடிகர் கருணாஸ் அவதூறான கருத்துக்களை டுவிட்டரில் பதவு செய்திருப்பதுபோல வட்ஸ்–அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேற்று தகவல் பரவியது. இதையடுத்து நடிகர் கருணாசை பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டனர்.

அதன்பின்னரே தனது பெயரை யாரோ தவறாக பயன்படுத்தி இருப்பது அவருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கருணாஸ் இன்று சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் இதுதொடர்பாக புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், ‘‘டுவிட்டர் வலைதளத்தில் எனது பெயரில் தவறான கருத்துக்களை பதிவு செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



பின்னர் கருணாஸ் நிருபர்களிடம் கூறியபோது..

நடிகர் அஜித்குமாரை வெளிநாடுகளில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளுக்கு அழைக்கக்கூடாது என்றும், எந்த ஒரு உதவியும் கேட்டு அவரது வீட்டுக்கு செல்லக்கூடாது என்றும் நான் பதிவு செய்ததுபோல எனது பெயரை பயன்படுத்தி யாரோ சிலர் டுவிட்டரில் தவறான தகவல்களை பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் இயக்குனர் வெங்கட்பிரபு கேட்டுக் கொண்டதற்கிணங்க எனது பெயரில் டுவிட்டர் வலைதளம் தொடங்கப்பட்டது. அந்த நேரத்தில் ஒருசில படங்கள் அதில் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதன்பின்னர் டுவிட்டரில் எந்தவிதமான கருத்துக்களையும் நான் பதிவு செய்யவில்லை. அதற்கு எனக்கு நேரமும் இல்லை.

இந்நிலையில்தான் எனது பெயரை பயன்படுத்தி இதுபோன்ற தகவல்களை பரவ விட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் இதுபோன்ற அபத்தமான, ஆபத்தான கருத்துக்களை பதிலிடுவது என்பது சரியான செயல் இல்லை.

சில நேரங்களில் அதுபோன்ற கருத்துக்கள் பெரிய அளவில் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுவதற்கு வாய்ப்பு உள்ளது. நான் மட்டும் இதுபோன்று பாதிக்கப்படவில்லை. பெண்கள் பலரும் சமூக வலைதளங்களால் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். பிடிக்காத ஒரு பெண்ணை பற்றி தவறான தகவல்களும் பரப்பப்படுகின்றன.

எனவே காவல் துறையினர் இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கு முன்பு ராஜபக்சவிடம் நான் 10 லட்சம் ரூபாய் வாங்கி விட்டதாக அவதூறு பரப்பினார்கள்.

ஒருநாள் இரவிலேயே சினிமாவில் நான் இந்த இடத்தை பிடித்து விடவில்லை. மிகவும் கஷ்டப்பட்டுதான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். எனது பெயரையும், புகழையும் கெடுப்பதற்காகவே சிலர் திட்டமிட்டு செயல்படுகின்றனர். அவர்கள் யார் என்பதை பொலிசார் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.