
சமீபத்தில் நடிகர் சங்க தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நான் சரத்குமாருக்கு ஆதரவாக பேசியபோது, விஷால் அணியிரை பற்றி விமர்சனம் செய்தது நம் மக்கள் நிறைய பேருக்கு வருத்தத்தை அடையச் செய்துள்ளது. எனக்கும் அதற்குபின் அதைப் பார்த்தபோது நாம் அதிக உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இதை இவ்வாறு பதிவு செய்துவிட்டோமோ என்ற குற்றவுணர்வு வந்தது.
1990களில் இருந்து சரத்குமாரை நன்கு அறிந்தவன் நான். அவசர உதவி எதுவாக இருந்தாலும் நேரம் காலம் பார்க்காமல் அவரை நடுசாமத்தில் எழுப்பியிருக்கிறேன். ஒருமுறை பிரகாஷ் என்ற சிறுவனுக்கு இருதய சிகிச்சைக்கு, இன்னொருமுறை சம்பத்குமார் என்ற உதவி இயக்குனரின் இருதய சிகிச்சைக்கு, பல நேரங்களில் கல்வித்தொகை வேண்டி அவரிடம் சென்றேன்.
நடிகர் சங்க வேலைகளில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட விதம், அவரது தொலைநோக்கு சிந்தனை இவையெல்லாம் எனக்கு தெரியும்.
அதேநேரம் எதிர் முனையில் இருந்த நாசர் எனக்கு நண்பர்தான், நிறைய முறை அவரோடு எங்கள் திரையுலகம் தொடர்பாக பேசியிருக்கிறேன். அவர்மீதோ, சகோதரர் பொன்வண்ணன் மீதோ அல்லது நண்பர் கருணாஸ் மீதோ எனக்கு எந்த கருத்து வேறுபாடோ, சிந்தனை தொடர்பான சந்தேகங்களோ இல்லை.
அப்படியிருக்க விஷால், கார்த்தி இவர்கள் மீது மட்டும் எனக்கு கோபம் வரக்காரணம் என்ன என்பதையும் இங்குநான் பதிவு செய்தாக வேண்டும். இவர்கள் இருவரும் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள். நான் இவர்களுக்கு முன் இயக்குனராகி இவர்களை நடிகர்களாக பார்க்கிறேன். ஒரு சில பிரச்சினைகள் தொடர்பாக அவர்கள் மீது எனக்கு இருந்த வருத்தமே அன்று அந்தமேடையில் எனது கோபமாக அவ்வாறு வெளிவந்தது. தவிர, அவர்கள் மீது குறிவைத்து தாக்க வேண்டும் என எண்ணவில்லை.
அதேபோல ஜே.கே.ரித்தீஸ் பற்றியும் பேசிவிட்டேன். அதுகூட அவர் விஷால் அணி வீடியோவில் ராதா ரவியைப் பற்றி தவறாக மிகவும் மரியாதைக் குறைவாக சொல்லியிருந்தார். என்னதான் எதிரணியாக இருந்தாலும் 35 வருடம் சினிமாவில் அனுபவம் உள்ள ஒரு மூத்தகலைஞனை அப்படி சொல்வது தவறு என எனக்கு தோன்றியது.
என் மனதில் பட்டதை சொல்லிவிட்டேன். மற்றபடி யாரையும் குறிவைத்து தாக்கி ஓட்டு சேகரிக்க அப்படி சொல்லவில்லை. நான் எந்த அரசியல் சார்பும் இல்லாதவன். என்மீது அக்கறை உள்ள எனது ரசிகர்களும், அபிமானிகளும் எடுத்துச் சொல்லும்போது அதை நான் மறுத்தால் நல்லது இல்லை.
என் சொந்த பிரச்சனையின் போது அரவணைப்பாக இருந்தவர்கள் இப்போது அதட்டி சொல்லும்போது கேட்கத்தான் வேண்டும். தம்பி விஷால், தம்பி கார்த்தி, அண்ணன் ஜே.கே.ரித்தீஸ் உங்க மனது வருந்தும்படி பேசியமைக்கு, காயப்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.





