
கடந்த காலங்களில் போன்று நாட்டின் கல்வித்துறையில் அரசியல் தலையீடுகள் இல்லாவண்ணம் தாம் பாதுகாப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கடந்த 28 ஆம் திகதி கொழும்பு நாலந்தா கல்லூரியில் இடம்பெற்ற பரிசு வழங்கள் நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த காலங்களில் கல்வியியல் முறைகளில் அரசியல் தலையீடுகள் இருந்தமையே தற்போது கல்வித்துறையிலும் ஏற்படும் பெரும் முரண்பாடுகளுக்கு காரணமாகியுள்ளது எதிர்காலத்தில் இவ்வாறான அரசியல் தலையீடுகள் இல்லாத கல்விச்சூழலை ஏற்படுத்தி அதன் பிரதி பலனை மாணவர் சமுதாயம் 30 வருடங்கள் அல்லது ஐம்பது வருடங்கள் வரையில் அனுபவிக்கும் வகையிலான சிறந்த திட்டங்களை வகுப்பதே எமது நோக்கமாகவும் உள்ளது.
நாட்டில் கல்வித்துறை புதுப்பிக்கப்படாததால் கல்வி, தொழில்துறை, பொருளாதார துறை ஆகியன வெவ்வேறு பிரிவுகளாக உள்ளன. உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகள் கல்வித்துறையை புதுப்பித்துள்ளது போன்று எமது நாட்டில் கல்வியில் புதிய பரிமாணங்களை ஏற்படுத்த தேவையான அதிகாரங்களை தற்போதும் அரசாங்கம் தேசிய கல்வி நிறுவகத்திற்கு வழங்கியுள்ளது. அதன் பிரகாரம் கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்ட அத்தியாவசிய மாற்றங்கள் தொடர்ந்தும் பாதுகாக்கப்படும்.
கடந்த காலங்களில் இடம் பெற்றது போன்று கல்வித்துறையில் எனது சுய சிந்தனையை மாத்திரம் உள்நுளைத்து புதிய திட்டங்களை வகுக்க எதிர்பார்க்கவில்லை மாறாக கல்வி தொடர்பில் ஆழமாக அறிவுடைய புத்திமான்களை கொண்டு திட்டங்கள் வகுப்பதற்கே எதிர்பார்த்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இதன் போது நாலந்தா கல்லுரியின் நாலந்த புத்திர விருது பத்தகே ரபித டில்சான் என்ற மாணவருக்கு வழங்கப்பட்டதுடன் நாலந்தா கல்லூரியால் வருடாந்தம் வழங்கி வைக்கப்படும் கீர்த்தி ஸ்ரீ விருது தற்போதைய விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்களவிற்கு கல்வி அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வின் போது கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
Tags:





