வவுனியா, நெடுங்கேணியில் இருந்து இளைஞர் பாராளுமன்றத் தேர்தலுக்கு விண்ணப்பித்த இரு இளைஞர்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் சுனில் ஜெயமகா தெரிவித்துள்ளார்.
வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற ஊடகமாநட்டின் போது இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக கேட்ட போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்..
இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது. வவுனியா மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெறும் ஒருவர் மாத்திரம் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவுள்ளார்.
இதற்கமைவாக, வவுனியாவில் இருவர், வவுனியா தெற்கில் இருவர், செட்டிகுளத்தில் ஒருவர், நெடுங்கேணியில் இருவர் என 7 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் நெடுங்கேணியில் இருந்து விண்ணப்பித்த இருவரினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அவர்களது வேட்புமனுக்களில் பொலிஸ் நற்சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமையே காரணம். ஏனைய ஐவரும் எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறும் இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர் எனத் தெரிவித்தார்.