இளம்பெண்ணை கடத்தி, பலாத்காரம் செய்து கொன்றவருக்கு தூக்கு!!

474

Hang

ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் எஸ்தர் (23 வயது) குர்கான் நகரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

கடந்த 5.1.2014 அன்று அதிகாலை ஆந்திராவில் இருந்து ரயிலில் வந்த எஸ்தர் லோக்மானிய திலக் பஸ் நிலையம் அருகே திடீரென காணாமல் போனார். இதுதொடர்பாக, அளிக்கப்பட்ட புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்து, பொலிசார் தேடிவந்த நிலையில் 16.1.2014 அன்று பந்தப் புறநகர் பகுதியில் உள்ள விரைவு நெடுஞ்சாலையில் எஸ்தரின் பிரேதம் அழுகிய நிலையில் கிடந்தது.

பிரேதத்தை கைப்பற்றி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பியதில், அவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ரயில் நிலையத்தில் இருந்த 36 கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து சுமார் 2500 பேரிடம் பொலிசார் விசாரணை நடத்தினர்.

இதன் விளைவாக, சந்திராபன் சனாப் (29) என்பவனை கைது செய்து பொலிசார் விசாரித்தபோது, பஸ் நிலையத்தில் தனியாக அமர்ந்திருந்த எஸ்தருக்கு ‘லிப்ட்’ தருவதாக கூறி, மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்று பலாத்காரம் செய்து கொன்றதை அவர் ஒப்புகொண்டார்.

இதையடுத்து, மும்பை ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் கூலித் தொழிலாளியாக பணியாற்றி, பின்னர் சாரதியாக மாறிய அவர் மீது மும்பை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் சனாப்புக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி வ்ருஷாலி ஜோஷி இன்று தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கை அரிதிலும் அரிதானதாக கருதி இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிர் பிரியும்வரை குற்றவாளியை தூக்கிலிட்டு கொல்லுமாறும் தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.