பத்து வயது சிறுமி பேருந்தினுள் வைத்து பாலியல் துஸ்பிரயோகம்- 67 வயது நபருக்கு கடூழியம்!!

1153

1 (10)பத்து வயது சிறுமியை அறுபத்தேழு வயது நிரம்பிய ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையில் குறித்த நபரைக் குற்றவாளியாகக் கண்ட கம்பளை மாவட்ட நீதிமன்றம் அவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதியே மேற்படி சம்பவம் இடம்பெற்றதாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

மேற்படி சந்தேக நபர் கம்பளை உலப்பனைக்கிடையிலான பாடசாலை சேவை பஸ்ஸின் சாரதியாக கடமையிலிருந்துள்ளார். இவரது பஸ்ஸில் பாடசாலைக்கு செல்லும் மேற்படி சிறுமியை பல சந்தர்ப்பங்களில் பாடசாலைக்குச் செல்லவிடாது பஸ் வண்டிக்குள் தடுத்து வைத்து மேற்படி குற்றத்தை புரிந்து வந்துள்ளார்.

இதனை அவதானித்த சிலர் கம்பளை பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து சந்தேக நபர் பஸ் வண்டிக்குள் சிறுமியுடன் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

கடந்த மூன்று வருடங்களாக விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையிலேயே நேற்று வியாழக்கிழமை மேற்குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது.