சச்சின் அளித்த ஊக்கமே என் விரக்தியை போக்கியது: அம்பாதி ராயுடு!!

382

Royal Challengers Bangalore v Mumbai Indians - IPL

சிம்பாவே அணியுடன் நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக இடம் பெற்ற அம்பாதி ராயுடு ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களை பெற்று வெற்றிக்கு உதவினார். 80 முதல்தர போட்டிகளில் விளையாடி 5183 ஓட்டங்கள் குவித்த பிறகே, இந்திய அணியில் அவரால் இடம் பிடிக்க முடிந்துள்ளது.

இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்காமல் விரக்தியில் இருந்தபோது சச்சின் அளித்த ஊக்கமே தொடர்ந்து விளையாடி சாதிக்க உதவியது என்று அம்பாதி ராயுடு நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

திறமையான இளம் வீரரான ராயுடு இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐசிஎல்) தொடரில் விளையாடியதால் கிரிக்கெட் வாரியத்தால் புறக்கணிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, ரஞ்சி மற்றும் ஐபிஎல் டி20 தொடரில் விளையாடி வந்தார்.

இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் விரக்தியில் இருந்தபோது சச்சின் டெண்டுல்கர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் ரொபின் சிங் மற்றும் உதவியாளர்கள் அளித்த ஆதரவும் ஊக்கமுமே சிறப்பாக விளையாட உதவியதாக ராயுடு கூறியுள்ளார்.

இது குறித்து நேற்று அவர் கூறுகையில் சச்சின் மற்றும் ரொபின்சிங் இருவரும் எனக்கு பல வகையில் உதவி செய்துள்ளனர். அவர்கள் இருவரும் அளித்த ஊக்கம் தான் சிறப்பாக விளையாட உறுதுணையாக இருந்தது. இருவருக்கும் இந்த சமயத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றாவது ஒருநாள் இந்திய அணியில் எனக்கு இடம் கிடைக்கும் என உறுதியாக நம்பினேன். கால தாமதம் ஆனாலும் தற்போது அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கோஹ்லியுடன் இணைந்து விளையாடியது நல்ல அனுபவமாக இருந்தது. அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். தொடர்ந்து சிறப்பாக விளையாட கடுமையாக உழைப்பேன். இவ்வாறு ராயுடு கூறியுள்ளார்.