இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணிக்கு பல தேசிய வீரர்களை உருவாக்கிக் கொடுத்த ரட்ணம் பார்க் கொழும்பு மாநகர சபையினால் புனரமைக்கப்பட்டு கொழும்பு மேயரினால் அண்மையில் திறந்துவைக்கப்பட்டது. சுமார் ஐந்து வருடங்களாக காடாக காட்சியளித்த இந்த மைதானம் 220 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு கொட்டாஞ்சேனை மக்களின் பாவனைக்கு மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.
திறப்பு விழாவன்று 40 வயதுக்கு மேற்பட்ட றினோன் அணிக்கும் ரட்ணம், செரெண்டிப் கூட்டு அணிக்கும் இடையிலான கால்பந்தாட்டப் போட்டியும் நடத்தப்பட்டது.இப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததைத் தொடர்ந்து பெனல்டி முறையில் ரட்ணம், செரெண்டிப் கூட்டு அணி வெற்றிபெற்றது.
திறப்பு விழாவில் கொழும்பு மாநகர பிதா எம். ஜே. எம். முஸம்மில், மாநகர சபை உறுப்பினர் எம். ரீ. எம். இக்பால், ஆகியோர் கலந்துகொண்டனர். ரட்ணம், செரெண்டிப், றினோன் ஆகிய கழகங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவின் மேற்பார்வையில் இந்த மைதானம் பராமரிக்கப்படும்.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் அநுர டி சில்வா, இணைக் குழுத் தலைவர் நோபர்ட் பெர்னாண்டோ, செயலாளர் டெஸ்மண்ட் ஜோசப், பொருளாளர் ரொய்ஸ்டன் பெர்னாண்டோ, உதவித் தலைவர் ஹேர்லி சில்வேரா, றினோன் கழகத் தலைவர் ரொபர்ட் பீரிஸ் ஆகியோர் உட்பட ஏராளமானோர் இந்தத் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.





