சச்சினின் முதல் தர சத சாதனையை சமன் செய்தார் ரிக்கி பொன்டிங்..

485

முதல் தர கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் நிகழ்த்தி வைத்துள்ள சாதனையை ஆஸ்திரேலிய கிரிக்கெட்வீரர் ரிக்கி பொன்டிங் சமன் செய்துள்ளார். இங்கிலாந்தின் சுர்ரே அணியில் சேர்ந்து விளையாடிய போது இந்த சாதனையை நிகழ்த்தினார் ரிக்கி. இங்கிலாந்தின் கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் முதல்முறையாக சுர்ரே அணியில் இடம் பெற்றுள்ளார் ரிக்கி பொன்டிங். டெர்பிஷயருக்கு எதிரான போட்டியின்போது ரிக்கி பொன்டிங் அபாரமான சதத்தைப் போட்டார். இது அவரது 81வது முதல் தர கிரிக்கெட் சதமாகும். ஏற்கனவே சச்சினும் 81 சதங்களை எடுத்து சாதனையுடன் இருந்து வந்தார். தற்போது அவருடன் ரிக்கியும் இணைந்துள்ளார்.

சச்சின் தனது சாதனையை 486 இன்னிங்ஸ்களில் நிகழ்த்தியிருந்தார். ஆனால் ரிக்கிக்கு 489 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டுள்ளன. இந்தியாவின் சுனில் கவாஸ்கரும் கூட 81 முதல் தர சதங்களைப் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சர் ஜேக் ஹாப்ஸ் என்ற வீரர்தான். இவர் 199 முதல் தர சதங்களைக் குவித்து வைத்துள்ளார்.

சர்வேதச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்ட ரிக்கி பொன்டிங் தற்போது சுர்ரே அணிக்காக விளையாட ஆரம்பித்துள்ளார். ஓய்வு பெற்ற போதிலும் கூட ரிக்கியின் ஆட்டம் சிறப்பானதாக இருந்ததைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 182 பந்துகளைச் சந்தித்த ரிக்கி ரிக்கி பொன்டிங் 120 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.