அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் இலவச வைபை வசதி வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக் கனணிகளை வழங்க மூன்று வருடங்களுக்கு வட்டியில்லாக் கடன் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் இதற்கான மானிய நிதி எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் நடுத்தர பொருளாதார வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆற்றிய விஷட உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரச விடுதிகளில் 10 வருடங்களுக்கு மேல் தங்கியுள்ள பலருக்கு அதற்கான உறுதி வழங்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் லயன் அறைகளில் 10 வருடங்களுக்கும் மேலாக வசிக்கும் தோட்ட மக்களுக்கு சிறிய இடம் அல்லது வீட்டு உரிமை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன் பொருட்டு உரிய சட்ட விதிகள் விரைவில் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2020இல் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை 3.5 வீதமாகக் குறைக்கப்படும் என தனது உரையில் சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கான இறக்குமதி வரி நீக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பனவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் இவை இரண்டையும் இணைத்து தேசிய ஓய்வூதிய பணிக்கொடை நிதி என்ற ஒன்றை உருவாக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் நடந்தது போன்று நிதிகளை ஒவ்வொரு அரசியல்வாதிகள் அல்லது அதிகாரிகளுக்கும் தேவையான வகையில் வீணடிக்க இடமளிக்கப்பட மாட்டாது எனவும், ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.





