வவுனியா, சேமமடு, நொச்சிக்குளத்தில் பெறுமதியான முதிரை மரங்களைக் கடத்திய குற்றச்சாட்டில் இரு பொலிஸ் புலனாய்வுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா, சேமமடு, நொச்சிக்குளம் பகுதியில் செவ்வாய்கிழமை இரவு பெறுமதியான முதிரை மரங்கள் கடத்தப்படுவதாக வவுனியா வனத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து அவர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கப்ரக வாகனம் ஒன்றில் பெறுமதியான முதிரை மரங்களை ஏற்றி வந்த வேளை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனத்தில் வந்த மூவர் தப்பியோடியுள்ள நிலையில், இரு பொலிஸ் புலனாய்வுத்துறையினர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரங்கள் மீட்கப்பட்டதுடன் கடத்தலில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய கப்ரக வாகனம், இரு மோட்டர் சைக்கிள்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தப்பியோடியவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறும் நீதிமன்றம் வவுனியா பொலிசாருக்கு தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் புலனாய்வுத்துறை உறுப்பினர்களும் கடமையின் போதே மரக்கடத்தலில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.






