தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளராக தமிழகத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி என்ற திருநங்கையை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், கந்தம்பட்டியைச் சேர்ந்தவர் கே.ப்ரித்திகா யாஷினி. ஆணாகப் பிறந்த இவர், அறுவைச் சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினார். கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்த காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு இவர் விண்ணப்பித்தார்.
பிரித்திகா திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தன்னை எழுத்துத் தேர்வு எழுத அனுமதிக்கும்படி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் பிரித்திகா யாஷினி.
உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து, அவர் எழுத்துத் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். உடல் தகுதித் தேர்விலும் அவரை அனுமதிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இறுதியாக தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழுதகுதி உடையவர் என்பதனால், காவல் துறையில் உதவி ஆய்வாளராக அவரை இணைத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





