காணாமல் போனோருக்கான ஆணைக்குழு அடுத்த மாதம் யாழில்!!

493

2073080115Untitled-1

காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் டிசம்பர் மாதம் 11ம் திகதி முதல் 16ம் திகதி வரையும் யாழில் நடைபெறவுள்ளதாக அம் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

ஆணைக்குழுவினால் விண்ணப்பபடிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, பதிவுகளை மேற்கொண்டவர்களுக்கான விசாரணை அமர்வில், 2539 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்படி யாழ்ப்பாணத்தில் 501 விண்ணப்பங்களும், வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் 219 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலக பகுதியில் 558 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் 561 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரிவில் 463 பேரும், கோப்பாய் பகுதியில் 237 பேருமாக 2539 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு பதிவுகளை மேற்கொண்டவர்களில் யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பகுதியைச் சேர்ந்தோருக்கான விசாரணைகள் டிசம்பர் 11ம் திகதி யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளன. மேலும், 12ம் திகதி நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்துறை காரைநகர், ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்களுக்கான விசாரணைகள் வேலணை பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்படும்.

அத்துடன் 13ம் திகதி சங்கானை, உடுவில், சண்டிலிப்பாய், தெல்லிப்பளை ஆகிய பகுதிகளுக்கான விசாரணைகள் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திலும், 14ம் திகதி கரவெட்டி, மருதங்கேணி, பருத்தித்துறை, ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்திலும், 15ம் திகதி சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு சாவகச்சேரி பிரதேச செயலகத்திலும், 16ம் திகதி கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு கோப்பாய் பிரதேச செயலகத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன, என யாழ் அரசாங்க அதிபர் மேலும் கூறியுள்ளார்.