
காதலனுடன் தலைமறைவான பெண்ணொருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆப்கானிஸ்தானில் ஆர்ப்பாட்டமோன்று இடம்பெற்றுள்ளது.
ஆப்கான் நாட்டில் கோர் பகுதியை அடுத்துள்ள மலைப்பிரதேசமான ஹெலிம் கிராமப்பகுதியில் வசித்து வந்த ரொக் ஷானா என்ற இளம்பெண்ணுக்கு வயது முதிர்ந்த நபருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த திருமணம் பிடிக்காத குறித்த பெண், தான் காதலித்து வந்த இளைஞனுடன் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து, அந்த இளம்பெண்ணை தேடிக் கண்டுபிடித்து வந்த தலிபான்கள் அவரை கழுத்தளவு குழிக்குள் புதைத்து கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் பரவி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் இஸ்லாமிய மதத்திற்கு முரணானது என்றும் குற்றச்செயல் எனவும் ஜனாதிபதி அஷ்ரப் கானி கண்டித்திருந்தார்.
இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து காபூலில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது. அதில் பெருமளவு பெண்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்த கல்லெறிந்து கொல்லும் தண்டனையை ஏற்பாடு செய்த தலிபான்களையும், அரசாங்கத்தையும் கண்டித்து அங்கிருந்தவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
மேலும், சிலர் போலி இரத்தம் தோய்ந்த ஆடையை அணிந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.





