வவுனியாவில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு!

708

timthumb

விடுதலைகோரி சிறைச்சாலைகளில் மீண்டும் உண்ணா விரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் வவுனியாவில் அலுவலகங்களை மூடி ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக தெரியவருவதாவது,

நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யக் கோரி கடந்த மாதம் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர். எனினும் ஜனாதிபதியின் உறுதிமொழியை அடுத்து அவர்கள் தமது போராட்டத்தை கைவிட்டனர்.

ஆனால் கொடுத்த வாக்குறுதிகளின் படி அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.



இந்நிலையில் அரசியல் கைதிகள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஹர்த்தாலுக்கான அழைப்பினை விடுத்துள்ளது.

நேற்று (08.11.2015) பிற்பகல் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தனின் தலைமையில் அவரது வவுனியா அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே மேற்கண்ட ஹர்த்தாலுக்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பேரூந்துகள், முச்சக்கரவண்டிகள், பொது சேவைகள் ஆகியவற்றின் சங்கங்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இதன்படி எதிர்வரும் 13ம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தால் (பொதுவேலைநிறுத்தம்) நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சகல வர்த்தக நிலையங்களையும், வங்கி உட்பட அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் ஆதரவு வழங்க முன்வருமாறு வேண்டும்.

இக்கூட்டத்தில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம், மாகாணசபை உறுப்பினர்கள் எம்.பி.நடராஜ், ம.தியாகராஜா, க.சிவனேசன், வடமாகாண போக்குவரத்து அமைச்சரின் இணைப்பாளர் செந்தில்நாதன் மயூரன்,

வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம், வர்த்தக சங்க உபதலைவர் கே.லியாகத் அலி, வர்த்தக சங்க பொருளாளர் மா.கதிர்காமராஜா, தினச்சந்தை செயலாளர் நந்தன், வரியிறுப்பாளர் சங்கத் தலைவர் செ.சந்திரகுமார் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்பினரும் கலந்துகொண்டனர்.