எனது திறமையை நிரூபித்து விட்டேன் : ரவீந்திர ஜடேஜா!!

554

Jadeja

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 108 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

இந்தியா முதல் இன்னிங்சில் 201 ஓட்டங்களையும், தென்னாபிரிக்கா முதல் இன்னிங்சில் 184 ஓட்டங்களையும் எடுத்தன. பின்னர் இந்திய அணி 2வது இன்னிங்சில் 200 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதனையடுத்து 218 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா ரவிந்திர ஜடேஜாவின் சுழற்பந்தில் திணறியது. அந்த அணி 109 ஓட்டங்களை மட்டுமே பெற்று மோசமான தோல்வியை தழுவியது.

ஜடேஜா 11.5 ஓவர்கள் பந்து வீசி 21 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அவர் முதல் இன்னிங்சில் 3 விக்கெட் கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி இந்த டெஸ்டில் 8 விக்கெட்டுக்களை வீழ்த்தியதால் ஜடேஜா ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

அஸ்வின் 3 விக்கெட்டுக்களையும், அமித்மிஸ்ரா, வருண் ஆரோன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ஜடேஜா ரஞ்சி கிண்ணத்தில் சிறப்பாக பந்து வீசியதால் அணிக்கு மீண்டும் தேர்வு பெற்றார் என்பது நினைவுகூரத்தக்கது. இது தொடர்பாக ஜடேஜா நிருபர்களிடம் கூறியதாவது..

ரஞ்சி கிண்ணப் போட்டியில் சிறப்பாக பந்து வீசினேன். இதனால் எனது பந்து வீச்சு மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. பந்து வீச்சுக்காக அதிகமாக பயிற்சி செய்தேன். மொகாலி டெஸ்ட் நான் அணிக்கு மீண்டும் திரும்பிய ஆட்டம் என்பதால் நேர்மறை எண்ணத்துடன் பந்து வீசினேன்.

திறமையை வெளிப்படுத்த நெருக்கடியில் விளையாடினேன். சிறப்பான பந்து வீச்சு மூலம் எனது திறமையை நிரூபித்து விட்டேன். இது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது என்று அவர் கூறியுள்ளார்.