
வவுனியா மாவட்டத்தில் பொது இடங்களிலுள்ள இராணுவத்தை படிப்படியாக விலக்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். முதற்கட்டமாகாண குடியிருப்பு கலாசார மண்டபம் மற்றும் பூந்தோட்டம் கூட்டுறவு பயிற்சிப்பாடசாலை என்பவற்றிலுள்ள இராணுவத்தை விலக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது..
நேற்று (12.11.2015) வடமாகாண முதலமைச்சர் தலைமையில் மாகாண அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன அவர்களை சந்தித்து கலந்துரையாடினோம். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு 1 ½ மணிநேரம் வரை இடம்பெற்றது.
வடக்கு மாகாணத்திலுள்ள அன்றாட, உடனடிப்பிரச்சனைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது இராணுவம் தொடர்ந்தும் பொது இடங்களில் நிலைகொண்டுள்ளமை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
வவுனியா மாவட்டத்தில் இராணுவம் நிலைகொண்டுள்ள பொது இடங்கள் பற்றி ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தேன். படிப்படியாக இராணுவத்தை பொது இடங்களிலிருந்து அகற்றுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக பூந்தோட்டம் கூட்டுறவு பயிற்சிப்பாடசாலை மற்றும் குடியிருப்பு கலாசார மண்டபம் என்பவற்றிலிருந்து உடனடியாக இராணுவத்தை விலக்க சம்மதம் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தின் ஒரேயொரு கூட்டுறவு பாசாலை பூந்தோட்டத்தில் அமைந்துள்ளது. 2009ற்கு பின்னர் இராணுவத்தால் கையேற்கப்பட்ட இந்த கட்டிடமானது முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு நிலையமாக இயங்கிவருகின்றது.
அதேபோன்று குடியிருப்பு கலாசார மண்டபம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இராணுவ முகாமாக இயங்கி வருகின்றது. மக்கள் செறிந்து வாழுகின்ற நகரப்பகுதியில் கோவில்,சிறுவர் பூங்கா, பாடசாலைக்கு மத்தியில் இந்த முகாம் இயங்கிவருகிறது. இவற்றிலிருந்து இராணுவத்தை விலக்கி இயல்பு நிலையை ஏற்படுத்தவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.





