மிகச் சிறப்பாக நடைபெற்ற வவுனியா வடக்கு பிரதேச செயலக கலாசார விழா!!(படங்கள்)

764

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா நேற்று (25.7) கோலாகலமாக பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது. “இயல் இசை நாடகத்தால் இன்பத்தமிழ் வளர்ப்போம்” எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலாளர் க. பரந்தாமன் தலைமையில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந் நிகழ்வில் தமிழ் வளர்த்த பெரியார்களின் திருவுருவப்படங்கள் தாங்கிய ஊர்தியுடன் தமிழர் பாரம்பரிய கலைகள் காவடி கலப்பை பூட்டிய எருதுகளுடன் பண்பாட்டு பேரணி நெடுங்கேணி மாகவித்தியாலயத்தில் ஆரம்பித்து பிரதேச செயலகத்தை வந்தடைந்திருந்தது.

இதனையடுத்து பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ள வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் உட்பட கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்ட வவுனியா வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் ரி.தணிகாசலம் வவனியா மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சரஸ்வதி மோகநாதன் சேவா லங்காவின் நிகழ்சி திட்ட பிரதி பணிப்பாளர் திருமதி அனட்ரோய் பிரேமலதாவும் பொஸ்டோ நிறுவன நிகழ்சி திட்ட முகாமையாளர் பி. செந்தில் குமரனும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் நிகழ்ச்சி திட்ட அலுவலர் சா. சயந்தனும் அழைத்து வரப்பட்டு மங்களவிளக்கேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.

இதனையடுத்து நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகளால் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதுடன் புளியங்குளத்தை சேர்ந்த நிருத்திய கலாசேஸ்திர நுண் கலைக்கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனமும் வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் வே.ஆயகுலனின் வரவேற்புரையும் இடம்பெற்றது.

தலைமையுரையினை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் ஆற்ற “காலம் தோறும் தமிழ்” எனும் இலக்கிய சொற்பொழிவினை இலக்கிய சுடர் ஐ.கதிர்காமசேகரமும் நெடுங்கெணி நாவலர் முன்பள்ளி மாணவர்களின் இசைவும் அசைவும் நிகழ்வும் கவிக்கதிர் தம்பித்துரை ஐங்கரனின் தலைமையில் கவிஞர் மாணிக்கம் ஜெகன் வன்னியூர் நிசான் நந்தா மருதோடை நிலா ஆகியோரின் பங்கேற்புடன் நல்லதோர் விணை செய்வோம் எனும் தலைப்பில் கவியரங்கமும் கண்ணீந்த கண்ணப்பன் எனும் தலைப்பில் திருக்காலத்தி வில்லிசைக்குழுவினரின் வில்லிசையும் “மருதமுகில்” நூல் வெளியீடும் இடம்பெற்றிருந்தது.

இதன் தொடர்ச்சியாக நூலின் வெளியீட்டுரையினை வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் மி.சூசைதாசனும் ஏற்புரையினை மலராசிரியர் ஜெ.கோபிநாத்தும் ஆற்றியதுடன் நெடுங்கேணி செம்மொழிக்கலாமன்றத்தை சேர்ந்த இராஜேந்திரம் தவபாலன் ஆகியோரின் மதுரக்குரலிசையும் இலக்கியச்சுடர் ஐ.கதிர்காமசேகரம் தலைமையில் இன்றைய உலகில் தமிழர் பாரம்பரியம் பெரிதும் பின்பற்றப்படுகின்றதா? பின்தள்ளப்படுகின்றதா? எனும் தலைப்பில் இன் தமிழ் இனியன் எஸ்.எஸ்.வாசன் இளங்கலைச்சுடர் ஜெ.கோபிநாத் க.தவபாலசிங்கம் ஜெ.திருவரங்கன் பா.ரஜீவன் த.தர்மேந்திரா ஆகியோரின் பங்கேற்புடன் பட்டிமன்றமும் நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகளின் செம்பு நடனமும் நடைபெற்றது.

தொடர்ந்து புளியங்குளத்தை சேர்ந்த நிருத்திய கலாசேஸ்திர நுண்கலைக்கல்லூரி மாணவிகளின் கீதாஞ்சலியும் நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகளின் சுளகு நடனமும் கனகராஜன்குளம் மாவித்தியாலய மாணவர்களின் “அர்ச்சந்திர மயான காண்டம்” இசை நாடகமும் மதியாமடு விவேகாநந்தா வித்தியாலய மாணவாகளின் சுமைதாங்கி எனும் சமூக நாடகமும் நெடுங்கேணி மகாவித்திhயலய மாணவிகளிள் “சத்தியவான் சாவித்திரி” இசை நாடகமும் சின்னடம்பன் பாரதி வித்தியாலய மாணவாகளின் “காணல் நீர்” சமூக நாடகமும் நெடுங்கேணி மகாவித்தியாலய ஆசிரியாகள் மற்றும்; மாணவாகள் இணைந்து வழங்கும் ‘ஸ்ரீவள்ளி’ எனும் இசை நாடகமும் நடைபெற்றது.

தொடர்ந்து சின்னப்பூவரசன்குளம் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவர்களின் “காலங்கள் மாறினாலும்” எனும் தலைப்பில் சமூக நாடகமும் மாறாவிலுப்பை அ.த.க. பாடசாலையின் “ஏழு பிள்ளை நல்ல தங்காள்” எனும் இசை நாடகமும் கலை வேந்தன் இசை நாடக வள்ளல் ம.தைரியநாதன் குழுவினரின் “பூதத்தம்பி” இசை நாடகமும் கற்சிலை மடு பரந்தாமன் நாடக கலாமன்றத்தினரின் பண்டாரம் வன்னியனார் எனும் வரலாற்று நடகமும் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை பல்துறையிலும் கலை வளர்ச்சிக்கு உழைத்த கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டிருந்தனர். எனினும் வவுனியா வடக்கில் பல்வேறு நெருக்கடியான காலத்திலும் இப் பிரதேசத்தின் கலைச் செயற்பாடுகளை வெளியுலகிற்கு காட்டியிருந்த ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்படாமை தொடர்பில் அப் பிரதேச ஊடகவியலாளாகளின் விசனம் காணப்பட்டபோதிலும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு மக்கள் தம் இயல்பு வாழ்வுக்கு திரும்பிய நிலையில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற இந் நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் காலையில் இருந்து இரவு 9 மணிவரை காத்திருந்து தம் பிரதேச கலை கலாசார நிகழ்வுகளை கண்டு களித்து பெருமை சேர்த்திருந்தனர்.

தவிர்க்க முடியாத காரணங்களால் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட வவுனியா வடக்கு சமுர்த்தி உத்தியோகத்தர்களின் “இனியாகினும் திருந்துவோம்” எனும் தாளலயம் நிகழ்வு இடம்பெறாமை பலருக்கும் மன ஆதங்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையிலும் கூட கலாசார நிகழ்வில் சிறப்பான நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டிருந்தமை வரவேற்பான விடயமாக இருந்ததையிட்டு பலரும் மெய்சிலிர்த்திருந்தனர்.

vavuniya1 vavuniya2 vavuniya3 vavuniya4 vavuniya5 vavuniya6