வவுனியாவில் வெள்ளிக்கிழமை முதல் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன் போக்குவரத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
அத்துடன் சிறிய குளங்களில் நீர்நிறைந்துள்ளதனால் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும் பாவற்குளத்தின் நான்கு வான்கதவுகளும் நேற்று திறக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான நிலப் பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிறிஸ்தவகுளம், பாவற்குளம் படிவம்1, பாவற்குளம் படிவம் 2, மீடியாபாம், ஆண்டியாபுளியங்குளம், மெனிக்பாம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களை அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தொடர்ச்சியான மழை காரணமாக மன்னகுளத்தில் 7 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதுடன், வவுனியா- சிதம்பரபுரம் வீதியில் சமனங்குளம், செட்டிகுளம்- மன்னார் வீதியில் சின்னசிற்பிக்குளம் ஆகிய பகுதிகளில் வீதியை ஊடறுத்து வெள்ளம் பாய்வதால் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது.






