அரசியலில் பிரபலமான தமிழ் சினிமா நட்சத்திரங்கள்..!!

486

cinema

நான் ஹீரோவாக வேண்டும் பின்னர் அரசியல், முதலமைச்சர் இதுதான் இன்றைக்கு சினிமாவில் நடிக்க வருபவர்களின் கனவாக இருக்கிறது. முதலமைச்சர் ஆனவுடன் பிரதமர் ஆகவேண்டும் என்ற கனவும் சேர்ந்தே வருகிறது.

சினிமா நட்சத்திரம் என்பது அரசியல்வாதியாவதற்கான ஒரு தனி தகுதியாக இருக்கிறது. காரணம் சினிமாவில் கிடைக்கும் பிரபலம்தான். ஒரு படத்தில் ஓஹோவென்று பேசப்பட்டுவிட்டால் போதும் மக்களிடம் அறிமுகம் கிடைத்துவிடும்.

அந்த அறிமுகத்தை வைத்து பிரபலமான கட்சியில் சேர்ந்து தனக்கென்று தனி இடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். அதேசமயம் எல்லா சினிமா நட்சத்திரங்களினாலும் அரசியலில் வெற்றிபெற முடியாது. இப்படி சினிமா நட்சத்திரமாக மின்னி அரசியல் தலைவராகவோ, எம்.எல்.ஏ, எம்.பி., என குறிப்பிட்ட பதவியில் உயர்ந்தவர்களைப் பற்றி சற்று பார்போம்.

எம்.ஜி. ராமச்சந்திரன்

மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்ற பெயரை விட எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்துதான் மக்கள் மனதில் பொறிக்கப்பட்ட பெயர். சினிமா நட்சத்திரமாக இருந்து அண்ணாவின் தம்பியாகி கடைசியில் மக்கள் தலைவராக பொன்மனச் செம்மலாக உயர்ந்தவர். தொடர்ந்து 3 முறை தமிழக முதல்வராக இருந்தார்.

சிவாஜி

திமுகவில் இருந்து காங்கிரஸ் பின்னர் தனிக்கட்சி என பயணித்தாலும் நடிகர் திலகமாக பெற்ற பெயரை அரசியல்வாதியாக சிவாஜியால் வெற்றி பெற முடியவில்லை.

எஸ்.எஸ்.ஆர்

சேடபட்டி சூரியநாரயணத்தேவர் ராஜேந்திரன் சினிமாவில் லட்சிய நடிகர் என்று பெயரெடுத்தவர். நடிகராக இருந்து முதன் முறையாக 1962ல் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ வாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தவர்.

வி.என். ஜானகி

எம்.ஜி.ஆருடன் நடித்து அவரின் இல்லத்தரசியாக மாறினார். எம்.ஜி.ஆர் மறைவிக்குப் பின்னர் முதல்வர் நாற்காலியை அலங்கரித்தார்.

ஜெயலலிதா

நடிகையின் மகளாக பிறந்து நடிகையாகி பின்னர் எம்.ஜி.ஆரின் அதிமுகவில் ஐக்கியமாகி இன்றைக்கு அந்தக்கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராகவும் தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விஜயகாந்த்

மதுரையில்அரிசி ஆலை நடத்துனரின் மகனாகப் பிறந்து, நடிகராக உயர்ந்து பின்னர் தனக்கென்று தனி கட்சி ஆரம்பித்து எம்.எல்.ஏவாக உயர்ந்தவர். இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தினை பெற்றுள்ளார்.

ராமராஜன்

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின்னர் அடுத்த முதல்வர் என்ற அளவிற்கு பேசப்பட்டவர். கடைசியில் அதிமுகவில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மட்டுமே அவரால் பெறமுடிந்தது. இப்போதைக்கு கட்சியின் பேச்சாளாராக மட்டுமே இருக்கிறார்.

சரத்குமார்

நாட்டாமை என்றாலே சரத்குமார் என்று கூறும் அளவிற்கு நடித்த அவர் திமுக, அதிமுக என்று மாறி மாறி பயணப்பட்டார். சில காலங்கள் நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி பதவி வகித்தார். தனிக்கட்சி தொடங்கி இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

டி.ராஜேந்தர்

நடிகராக மட்டுமல்ல இயக்குநராக,இசையமைப்பாளராக பல திறமைகளைக் கொண்ட டி.ராஜேந்தர் திமுகவில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இப்போது லதிமுக தலைவராக இருக்கிறார்.

ரோஜா

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரோஜா. இன்றைக்கு ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி இணைந்து பிரச்சார பீரங்கியாக செயல்பட்டு வருகின்றார்.

குஷ்பு

வடநாட்டில் பிறந்து நடிகையாகி இன்றைக்கு தமிழ்நாட்டின் மருமகளாகிவிட்ட குஷ்பு ஐக்கியமாகியுள்ளது திமுகவில். சினிமா பிரபலத்தினால் போகும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூடிய விரைவில் மிகப்பெரிய பதவி ஒன்று வழங்கப்படும் என்று பேசப்படுகிறது.

அதே போல் சினமாவில் பிரபலமானதாலேயே கட்சி ஆரம்பித்து காணாமல் போனவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களில் பாக்கியராஜ், கார்த்திக் முக்கியமானவர்கள். இப்படி பட்டியலிட்டால் இன்னும் எத்தனையோ நட்சத்திரங்களை கூறலாம்.