பேஸ்புக் செய்யக்கூடாத அந்த 7 தவறுகள்!!

703

fbஒருவர் தன் புகைப்படம், முகவரி, பணியிடம் தொடர்பான விபரங்கள்  போன்ற பல்வேறு விதமான சுயவிவரங்களை பேஸ்புக் தளத்தில் பகிர்ந்து கொள்வதால், அதை தங்கள் சுயநலத்துக்காகவோ, விளையாட்டாகவோ சில விஷமிகள் மாற்றி திரித்து விடுவது, மற்றும் விபரங்களைக் கொண்டு சம்பந்தப்பட்டவரை தொடர்புகொண்டு சில்மிஷங்கள் செய்வது போன்ற பல சிக்கல்களை பேஸ்புக் பயனாளிகள் சந்திக்கக்கூடும்.

இப்படி நிறைய பிரச்சினைகள் இருப்பதனால்  ஒட்டு மொத்தமாக பேஸ்புக் தளத்தை பயன்படுத்தாமல் இருந்து விடுவது நல்லது என்றோ, பேஸ்புக்கினால் கிடைக்கும் சில நல்ல விஷயங்களை அனுபவிக்காமல் விட்டுவிட வேண்டும் என்றோ சொல்ல முடியாது. ஆனால் பேஸ்புக்கை பாதுகாப்பாக எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொண்டால் மட்டுமே போதுமானது.அதைப்பற்றிய சில நுணுக்கங்களை அலசத்தான் இந்தப் பதிவு

பேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்த தவிர்க்க வேண்டிய 7 முக்கியமான செயல்களை பட்டியலிட்டிருக்கிறார்கள் சில வலைப்பின்னல் துறை வல்லுனர்கள். அவை

1. சுலபமான ஒரு கடவுச்சொல்லை பயன்படுத்துவது-
பெயர்கள், களஞ்சியத்தில் உள்ள சில சுலபமான வார்த்தைகள், அவற்றுக்கிடையில் எண்களை சேர்த்து பயன்படுத்துவது போன்றவற்றை உங்கள் கடவுச்சொல்லாக பயன்படுத்துவதை தவிர்த்தல் அவசியம். பதிலாக, பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களுடன் (upper- and lower-case letters) எண்கள் மற்றும் குறியீடுகளை (symbols) கடவுச்சொல்லாக பயன்படுத்துவது மிகவும் உறுதியானது.ஒரு கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துக்களைக் கொண்டிருத்தல் நலம். மற்றுமொரு வழி, ஒரு வார்த்தையின் நடுவில் எண்கள்/குறியீடுகளை சேர்த்து கடவுச்சொல்லாக பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. உதாரணமாக, “houses” என்னும் வார்த்தையை hO27usEs என்று மாற்றிப் பயன்படுத்துவது!

2. உங்களின் முழு பிறந்த தேதியை வெளிப்படையாக குறிப்பிடுவது-
இணையத்தில் உலவும், அடையாளத் திருடர்களுக்கு (identity thieves), ஒருவரின் பிறந்த திகதி தான் முதன்மையான இலக்கு. உங்களுடைய பிறந்த திகதியை வைத்து , உங்களின் மேலதிக தகவல்களை சேகரித்து, உங்களுடைய வங்கி கணக்கு போன்றவற்றை கடத்தக் கூடும். அய்யய்யோ…அப்படீன்றீங்களா? சரி சரி, உடனே உங்க பேஸ்புக் கணக்கை திறந்து, profile பக்கத்துக்கு போய், Info tab கிளிக் பண்ணி, Basic Information பகுதியில வெறும் பிறந்த தேதி மட்டும்/மாதம் மட்டும் இல்லைன்னா பிறந்ததேதியே குறிப்பிடாம விட்டுடுங்க. சரிங்களா?

3. சுய பாதுகாப்பு கட்டுப்பாடு வாய்ப்புகளை அலட்சியப்படுத்துவது-
உங்களுடைய பேஸ்புக் பக்கத்தில் , மற்றவர்களுடைய தொடர்பு வழங்க நண்பர்கள் மட்டும் (only friends) நண்பர்களின் நண்பர்கள் மட்டும் (friends of friends) அல்லது நீங்கள் மட்டும் (yourself) இப்படி பல கட்டுப்பாடுகள் வச்சிக்கலாம்.இந்தப் பக்கத்தில் , உங்களுடைய படங்கள், பிறந்த திகதி , மத பார்வை மற்றும் குடும்ப விவரங்கள், இது எல்லாத்தையும் மேற்குறிப்பிட்டபடி ஒரு வகையான கட்டுப்பாட்டுக்குள் வையுங்கள் . மிக முக்கியமாக , உங்களுடைய தொலைபேசி எண், முகவரி போன்ற தொடர்பு விவரங்கள மற்றவர்கள்பார்க்கும்படி வைக்காதீர்கள்.

4. உங்களின் குழந்தையின் பெயரை புகைப்பட தலைப்புகளாக பயன்படுத்துவது – உங்களுடைய குழந்தைகள் பெயரை படங்களின் தலைப்புகளாகவோ, குறியீடுகளாகவோ (photo tags) பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. வேறு யாராவது உங்களுடைய குழந்தைகள் பெயரை பயன்படுத்தியிருந்தா, Remove Tag என்னும் தொடர்பை அழுத்தி நீக்கிவிடுங்கள்

5. நான் வெளியூருக்குச் செல்கிறேன் என்று குறிப்பிடுவது-
அதாவது, வெளியூருக்குச் செல்வதாயிருந்தா, “no one’s home” அப்படீங்கிற மாதிரியான விஷயங்கள எழுதுவதை தவிர்த்திடுங்க. நீங்க திரும்பி வந்து உங்க சுற்றுலா எப்படி இருந்ததுன்னு சொல்லிக்கலாம். அதேமாதிரி சுற்றுலா செல்லும் தேதியை மறந்தும் குறிப்பிடாதீங்க.

6. கூகுள் போன்ற தேடியந்திரங்களின் பார்வையில் இருப்பது-
பரிச்சயமில்லாதவர்கள் உங்கள் பேஸ்புக் பக்கங்களை, கூகுள் போன்ற தேடியந்திரங்கள் மூலம் அடைவதை தவிர்க்க, பேஸ்புக்கின் சுயபாதுகாப்பு பகுதிக்குள் இருக்கும் தேடுதல் பகுதியில் (Search section of Facebook’s privacy controls) நண்பர்கள் மட்டும் என்பதை தேர்ந்தெடுங்கள் (select Only Friends for Facebook search results). முக்கியமா பொதுத் தேடுதல் முடிவகள் என்பதை தேர்ந்தெடுக்காமல் இருக்கிறதா என்று உறுதிபடுத்தி கொள்ளுங்கள்! (Be sure the box for public search results isn’t checked)

7. மேற்பார்வையில்லாமல் குழந்தைகளை பேஸ்புக் தளத்தை பயன்படுத்த அனுமதிப்பது-
இது வரைக்கும் பார்த்ததிலேயே ரொம்ப முக்கியமானது இதுதான்.
அதாவது, பேஸ்புக் பக்கம் 13 வயது மற்றும் அதற்க்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பேஸ்புக்கை பயன்படுத்தவேண்டும் என்று விதி முறைப்படுத்தி இருந்தாலும், 13 வயதுக்கு குறைவானவர்களும் பயன்படுத்துகிறார்களாம். இவ்வயதுக்குட்பட்ட உங்க குழந்தை/குழந்தைகளும் பேஸ்புக்கை பயன்படுத்தும் பட்சத்தில், அவர்களை மேற்பார்வையிட மிகவும் சுலபமான வழி, அவர்களின் நண்பர்களில் ஒருவராகச் சேர்ந்து கொண்டு, அவர்களின் தொடர்பு மின்னஞ்சல் பகுதியில் உங்கள் மின்னஞ்சலைக் கொடுத்து, அவர்களுக்கு வரும் தகவல்கள் உங்களுக்கு வரும்படியாக செய்துகொள்வதுதான்.