பலர் வௌியேறியது ஜாதி, மத பேதங்களாலேயே: மீள தாயகம் திரும்புமாறு பிரதமர் அழைப்பு!!

1127

Ranil

ஜாதி, மத பேதமற்ற இலங்கையை உருவாக்குவது தொடர்பில் நாட்டுக்கு வௌியே உள்ள பலர் தற்போது இணைந்துள்ளதாகவும் அதேபோல் பிற நாடுகளிலுள்ள பலரும் தற்போது தாங்கள் இலங்கையர் என துணிவுடன் சொல்லக் கூடிய வரம் கிட்டியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட பிரதமர்,

ஜனவரி 8ம் திகதி தேர்தலில் நல்லாட்சியை ஏற்படுத்த மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர். அதனை பெற்றுக் கொண்டு நல்லாட்சிக்கு அடித்தளமிடும் வகையில் பாராளுமன்றத் தேர்தலை நடத்தினோம். அதன் முடிவுகளுக்கு அமைய தேசிய அரசாங்கத்தை அமைக்க எமக்கு வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலம் முழு பாராளுமன்றத்தையும் ஒன்றிணைக்க முடிந்தது.

எம்முடன் தொடர்ந்தும் பயணிக்க இலங்கை வாழ் மக்கள் மட்டுமன்றி பிற நாடுகளிலுள்ள இலங்கையர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இரண்டைக் குடியுறிமை உள்ளவர்களை பிரதானப்படுத்தி வேலைத் திட்டங்களை ஆரம்பித்தோம்.

பலர் இலங்கையில் இருந்து வௌியேறியது அரசியல் காரணங்களுக்காகவும் ஜாதி பேதங்களினாலேயுமாகும். 1983ம் ஆண்டு கலவரத்தின் பின் பல தமிழர்கள் நாட்டை விட்டுச் சென்றனர். இதனால் எமது நாட்டின் முக்கிய பிரஜைகள் நீங்கினர். அத்துடன் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக பல சிங்களவர்கள் பிற நாடுகளுக்கு சென்றனர். மத பேதங்களால் முஸ்லிம் மக்களும் வௌிநாடுகளுக்கு சென்றனர்.

இதேவேளை நாட்டு மக்களுக்கு சிறந்த பொருளாதாரம், வேலை வாய்ப்பு, கல்வியை பெற்றுக் கொடுக்க கடந்த காலங்களில் முடியாமல் போனதால் சிலர் நாட்டை விட்டு வௌியே செல்ல நேர்ந்தது.

இவ்வாறு வௌியே சென்ற அனைவரும் இன்று ஒன்றாக இணைந்துள்ளனர். அது புதிய இலங்கையை நிறுவுவதற்காக.. மத பேதமற்ற இலங்கையை நிறுவதற்காக… ஜாதி பேதமற்ற இலங்கையை நிறுவுவதற்காக.. உலகம் முழுவதும் பரந்துள்ளவர்கள் இன்று நாம் இலங்கையர் என்று துணிவுடன் சொல்லும் வரம் கிடைத்துள்ளது.

எமது கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற எந்த நாட்டுக்கு சென்றாலும் அங்குள்ள இலங்கையர்கள் எமது கொடியின் கீழ் ஒன்றிணைந்து நாம் இலங்கையர் என்கின்றனர். இலங்கைக்கு வௌியே உள்ள அனைவரையும் மீண்டும் தாயகம் வருமாறு நாம் அழைக்கிறோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்களுக்கு உங்களது ஆதரவு தேவை. நாம் இந்த நாட்டை கட்டியெழுப்புவோம், நாம் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வோம்.

இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை நிறுவுவதன் மூலம் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்பும் எமது முயற்சிகளுக்கு உதவி வழங்குமாறு இரட்டை பிரஜாவுரிமையாளர்களிடம் நாம் கோரிக்கை விடுகிறோம், என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.