வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரிநிலைய மக்களுக்கு வடக்கு மாகாண சபையினால் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் தற்போது பெய்துவருகின்ற கடும் மழையினால் பாதிக்கப்பட்ட சிதம்பரபுரம் நலன்புரி முகாமிலிருக்கின்ற 194 குடும்பங்களுக்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் உலர்உணவுப்பொருட்கள் இன்று விநியோகிக்கப்பட்டன.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்களால் இப்பொருட்கள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது.
மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா மற்றும் சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சீலன் பத்மநாதன், வவுனியா பிரதி விவசாயப்பணிப்பாளர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நீண்டகாலமாக திருத்தப்படாத தற்காலிக கொட்டகைகளில் வாழ்ந்தவரும் இந்தமக்கள் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






