
அடுத்த ஆறுமாத காலத்தினுள் நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பாராளுமன்ற முறைமையை அமுல்படுத்திவிட முடியும்.அதற்காக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை முழுமையாக நீக்குதல் மற்றும் தேர்தல் முறைமை மாற்றம் ஆகியவற்றுக்கான அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
தலைமையில் கூடும் உபகுழு கூட்டத்தில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவது தொடர்பில் ஆராயப்படும். அதேபோல் அடுத்த ஆண்டு ஜூன் மாதமளவில் இந்த தீர்மானங்களை எடுக்க முடியும். அடுத்த ஆறுமாத காலத்தினுள் இந்த விவகாரங்கள் தொடர்பில் முழுமையான காரணங்களை ஆராய்ந்து மீண்டும் அமைச்சரவையில் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே இணை ஊடகப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தி பாரளுமன்றதிறக்கும், அமைச்சரவைக்கும் அதிகாரங்களை வழங்குவதாக கடந்த காலத்தில் பலர் வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். எனினும் தமது ஆட்சிக்காலத்தில் அவ்வாறான எந்தவொரு நடவடிக்கைகளையும் எவரும் முன்னெடுக்கவில்லை.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பொதுவேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்த கொள்கை பிரகடனத்தின் படி 19ஆம் திருத்தச் சட்டத்துக்கு அமைய நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல் நூறு நாட்கள் அரசாங்கத்திலும் இந்த முயற்சிகள் கடுமையாக முன்னெடுக்கப்பட்டது.
எனினும் கடந்த காலத்தில் அந்த முயற்சிகள் கைவிடப்பட்டதாக ஒருசிலர் விமர்சித்தனர். அதேபோல் இந்த அதிகார நீக்கம் தொடர்பில் இழுத்தடிப்புகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர். எனினும் இந்த திருத்தத்தை மேற்கொள்ள முடியாமல் போனமைக்கான காரணம் என்னவெனில் இந்த திருத்தத்தை மேற்கொள்வதாயின் பொது மக்கள் வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்று இருந்தது.
ஆகவே இந்த விடயம் தொடர்பில் ஸ்திரமான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் வகையில் அரசியல் குழுக்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கருத்துக்களை கவனத்தில்கொண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி பாராளுமன்றத்திற்கு குறித்த அதிகாரங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனுடன் சேர்த்து மிகவும் பொருத்தமான தேர்தல் முறைமை ஒன்றையும் அறிமுகம் செய்யும் வகையில் அரசியல் அமைப்பு திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த யோசனைக்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த யோசனைகளை நடைமுறைப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயன்முறைகள் மற்றும் முன்னெடுக்க வேண்டிய அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் சிபாரிசுகளை முன்வைப்பது குறித்து ஆராய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவை உபகுழு ஒன்றையும் நியமித்துள்ளோம். குறித்த கால எல்லைக்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பிரதமர் தலைமையில் கூடும் உபகுழு கூட்டத்தில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவது தொடர்பில் ஆராயப்படும். அதேபோல் அடுத்த ஆண்டு ஜூன் மாதமளவில் இந்த தீர்மானங்களை எடுக்க முடியும். அடுத்த ஆறுமாத காலத்தினுள் இந்த விவகாரங்கள் தொடர்பில் முழுமையான காரணங்களை ஆராய்ந்து மீண்டும் அமைச்சரவையில் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்னர் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் பாராளுமன்றத்தில் திருத்தத்தை சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்றார்.





