கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிச்சீட்டுக்கள் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அதிர்பர்கள் உடனடியாக மாணவர்களுக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அனுமதிச்சீட்டுக்களை அதிபர்கள் வைத்துக் கொள்வதனால் மாணவர்கள் பரீட்சைகள் நேரங்களில் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்நோக்கினால் அதன் முழுப் பொறுப்பினையும் அதிபர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே பரீட்சைகள் ஆணையாளர் டப்ள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைகான அனுமதிச்சீட்டுக்கள் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் கடந்த 18 ஆம் திகதி தபால் மூலம் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் பரீட்சை அனுதிச்சீட்டுகளை பாடசாலை அதிபர்கள் உடனடியாக மாணவர்களுக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றை அதிபர்கள் வைத்திருக்க முடியாது. அவ்வாறு அனுமதிச்சீட்டுகளை அதிபர்கள் வைத்துக் கொள்வதனால் மாணவர்கள் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்நோக்கினால் அதன் முழுப் பொறுப்பினையும் அதிபர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இம்முறை மொத்தமாக 664537 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதுடன் இதில் 403442 பேர் பாடசாலை மாணவ மாணவியர் மறுபுறம் பாடசாலை பரீட்சார்த்திகளின் அனுமதிச்சீட்டுக்கள் பாடசாலை அதிபர்களுக்கும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதிச்சீட்டுக்கள் தனிப்பட்ட முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.





