வெங்காயம் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறி குழந்தை மரணம்!!

349

Baby11

கையில் அகப்பட்ட முழு வெங்காயத்தை வாய்க்குள் வைத்தபோது அது தொண்டைக்குள் சென்றதால் ஒரு வயதுக் குழந்தை மூச்சுத் திணறிப் பரிதாபகரமாக உயிரிழந்தது.

குழந்தையின் தொண்டைக்குள் வெங்காயம் இருந்தபோது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதும் அங்கு மருத்துவர் இருக்கவில்லை. நின்றிருந்த தாதியரும் ஆரம்பச் சிகிச்சைகூடச் செய்ய முற்படவில்லை என்று குற்றம் சுமத்தும் குழந்தையின் பெற்றோர், வைத்தியசாலை நிர்வாகம் பொறுப்புக் கூறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

காரைநகர் அல்லீன் வீதியைச் சேர்ந்த மனோகரன் ஜெனவன் என்ற ஒரு வயதுக் குழந்தையே உயிரிழந்தது.

நேற்றுமுன்தினம் தாயார் சம்பல் அரைப்பதற்காக வெங்காயம் உள்ளிட்ட பொருள்களை எடுத்து வைத்துள்ளார்.

தவண்டு வந்த குழந்தை வெங்காயம் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தைத் தட்டிவிட்டது. அதனால் சிதறுண்ட வெங்காயத்தைத் தாயார் மறுபடி பாத்திரத்தில் எடுத்துச் சென்று சம்பல் அரைத்துள்ளார். ஆனால், சிதறுண்டு கிடந்தபோதே குழந்தை ஒரு வெங்காயத்தைக் கையில் எடுத்துவிட்டது.

அதனைத் தாயார் கவனிக்கவில்லை போலும். அந்தக் குழந்தை கையிலெடுத்த வெங்காயத்தை வாய்க்குள் வைத்துள்ளது.

அதன்போது அந்த வெங்காயம் குழந்தையின் தொண்டையினுள் சிக்கியதனால் சுவாசிக்க முடியாமல் திணறியுள்ளது. சம்பல் அரைத்துக் கொண்டிருந்தபோது குழந்தை திணறுவதனைக் கண்ட தாயார் உடனடியாகக் குழந்தையைக் காரைநகர் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றார்.

ஆபத்தான நிலையில் குழந்தையை வைத்தியசாலையில் சேர்க்கும்போது அங்கு மருத்துவர் இருக்கவில்லை.

சுமார் 15 நிமிடங்களாக அங்கு மருத்துவர் வரவில்லை என்று குழந்தையின் பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர்.

நின்றிருந்த தாதியர்களும் ஏற்ற ஒழுங்குகள் செய்யவில்லை. அங்கு கட்டிலில் குழந்தையைப் படுக்க வைத்திருந்தனர்.

பின்னர் அம்புலன்ஸில் குழந்தையை ஏற்றி யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல முற்பட்டபோது அம்புலன்ஸில் பயணிப்பதற்கு அங்கு நின்றிருந்த தாதியர்கள் அக்கறை கொள்ளாது மறுத்துவிட்டனர்.

இதனால் அங்கு நின்றிருந்த சிற்றூழியர் ஒருவரே அம்புலன்ஸில் குழந்தையையும் பெற்றோரையும் ஏற்றிக் கொண்டு போதனா வைத்தியசாலைக்குப் புறப்பட்டார் என்றும் பெற்றோர் குற்றம் கூறினர்.

அதுமட்டுமன்றி குறித்த அம்புலன்ஸில் இரவு 10.30 மணியளவிலேயே பயணித்ததாகவும், அம்புலன்ஸின் உள்ளே மின்குமிழ் எதுவும் ஒளிரவில்லை எனவும், அதனால் கைத்தொலைபேசியின் வெளிச்சத்திலேயே குழந்தையை அவதானித்தவாறு பயணித்ததாகவும், எனினும் சிறிது தூரம் திணறிக்கொண்டிருந்த குழந்தை பின்னர் அசைவற்றுக் கிடந்ததாகவும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கும்போது குழந்தை உயிரிழந்துவிட்டதாகப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டதாகவும் பெற்றோர் விசாரணையின்போது தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றப் பணிப்புக்கமைய திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் பின்னர் குழந்தையின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குழந்தையின் உயிரிழப்புக்கு வைத்தியசாலை நிர்வாகம் மீது பெற்றோர் குற்றம் சுமத்துவது தொடர்பில், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் க.நந்தகுமாரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த சம்பவம் தொடர்பில் தனக்குத் தெரிவிக்கப்படவில்லை. எனினும் அது தொடர்பில் விசாரிப்பதாகத் தெரிவித்தார்.