2வது ஒருநாள் போட்டியிலும் சிம்பாவேயை வீழ்த்திய இந்தியா!!

412

indian team

சிம்பாவே அணிக்கெதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தவான் சதம், உனத்கத் பந்துவீச்சு கைகொடுக்க இந்திய அணி 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிம்பாவே சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என்று முன்னிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடந்தது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாவே அணித்தலைவர் பிரண்டன் டெய்லர் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். பின்னர் வந்த அணித்தலைவர் கோஹ்லி 14 ஓட்டங்களில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த தினேஷ் கார்த்திக், ஷிகர் தவான் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இரண்டு முறை தப்பிய ஷிகர் தவான் ஒருநாள் அரங்கில் தனது 3வது சதத்தை பதிவு செய்தார்.

இவருடன் கார்த்திக் அரைசதம் கடந்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 167 ஓட்டங்கள் சேர்த்த போது, தினேஷ் கார்த்திக் 69 ஓட்டங்களில் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடிய ஷிகர் தவான் சதம் கடந்து 116 ஓட்டங்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய வினய் குமார் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 294 ஓட்டங்கள் எடுத்தது. வினய் குமார் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சிம்பாவே சார்பில் பிரையன் விடோரி 2 விக்கெட் வீழ்த்தினார்.

295 ஓட்டங்கள் என்ற கடின இலக்குடன் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 236 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. சிபாண்டா அரைசதம் கடந்து 55 ஓட்டங்களும், ஹாமில்டன் மசகட்சா 34 ஓட்டங்களும், சிகும்பரா 46 ஓட்டங்களும்,உட்சே 52 ஓட்டங்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் உனத்கத் 4 விக்கெட்டும், அமித் மிஸ்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டி நாளை ஹராரேயில் நடைபெறவுள்ளது.