இன்று முதல் வாகனங்களின் விலை அதிகரிப்பு!!

255

Vehi

வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட வரியினால் வாகனங்களின் விலை இன்று முதல் அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 2 லட்சம் முதல் 25 லட்சம் வரை வாகனங்களில் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் சம்பத் மெரன்சிகே தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிகிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக வேகம் மற்றும் சென்ரிமீற்றர் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தி வரியொன்று அறிமுகப்படுத்தப்படுகின்றது.

இதனால் மாரூதி ரக வாகனங்கள் இரண்டரை லட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்றது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

வேகன் ஆர் ரக காரின் விலை 4 லட்சம் ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று 1000 குதிரை வேகத்தை கொண்ட வாகனங்களுக்கு 50 வீதமாக காணப்பட்ட வரி 70 வீதமாக அதிகரிக்கப்படுகின்றது.

மேலும், ஹபீரிட் வாகனங்களுக்கு அறவிடப்பட்டு வந்த வரி 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி, எக்வா ரக காரிற்கான விலை 5 தொடக்கம் 6 லட்சம் வரையிலும், பிரியஸ் ரக காரிற்கான விலை 7 லட்சம் வரையிலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தினால் இயங்கக்கூடிய வாகனங்களுக்கு அறவிடப்பட்ட வரி 5 வீதத்திலிருந்து 50 வீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, குறித்த வாகனங்கள் 25 லட்சம் வரை அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று வானொன்றிற்கான வரி 85 வீதத்திலிருந்து 150 வீதம் வரை அதிகரிக்கப்படுகின்றது. இதன்பிரகாரம், வானொன்றின் விலை 25 லட்சம் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடாத்த தீரமானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சம்பத் மெரன்சிகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சூரிய சக்தியில் இயங்கும் வாகனங்கள், ஹபீரிட், ஹிலியன் ஊடாக செயற்படுகின்ற வாகனங்களுக்கு அறவிடப்பட்ட உற்பத்தி வரி 2.5 வீதத்தால் குறைவடையவுள்ளதாக வரவு செலவுத்திட்ட வாசிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாவனையாளர்களை மட்டுப்படுத்தவே வாகனவரி- நிதியமைச்சர்

புதிய அரசாங்கத்தின் வரவு – செலவுத்திட்ட முன்மொழிவில் வாகன இறக்குமதிக்கான தீர்வை வரி அதிகரித்துள்ளது.

இதனால் வாகனங்களின் விலையை இன்றுமுதல் அதிகரிக்க வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ள நிலையில் நாட்டில் வாகனப் பாவனையாளர்களை மட்டுப்படுத்துவதற்கே தீர்வை வரியை அதிகரிக்கச் செய்தோம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குள் மாத்திரம் தற்பொழுது 69 இலட்சம் வாகனங்கள் காணப்படுகின்றன.

இதில் அரசாங்கத்துக்கு சொந்தமான வாகனங்கள் 68 ஆயிரம் ஆகும்.

இந்தநாட்டின் தற்போதைய தேவை வாகனங்களை விலை கொடுத்து வாங்குவதல்ல.

நாட்டின் பொதுமக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.