தங்க சுரங்கத்தில் புதையுண்ட, ஐந்து தொழிலாளர்கள், சுரங்கத்தில் புதையுண்டு 41 நாட்களின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட அதிசய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உயிருடன் மீட்கப்பட்ட இவர்கள் கரப்பான்பூச்சி, தவளை என்று சுரங்கத்தின் அடியில் கிடைத்த பூச்சிகளையும் களிமண் தரையில் இருந்த தண்ணீரையும் உறிஞ்சிக் குடித்து உயிர் பிழைத்துள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் ஷின்யாகா பிராந்தியத்தில், ஒரு தங்கச் சுரங்கம் அண்மையில் மூடப்பட்டது. அதில் இருந்து கிடைக்கும் தங்கத்தின் அளவு மற்றும் பாதுகாப்பு குறைந்ததால், அந்த சுரங்கம் மூடப்பட்டது.
எனினும் கடும் வறுமை காரணமாக தங்கத்திற்கு ஆசைப்பட்ட சிலர், சட்ட விரோதமாக, அந்த சுரங்கத்தை மீண்டும் தோண்டும் பணியில் கடந்த ஒக்டோபர் 5ம் திகதி ஈடுபட்டனர். இதன்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேர் சிக்கி கொண்டநிலையில் அதிலிருந்து 14 பேர் தப்பிவிட்டனர்.
6 பேர் சுரங்கத்தின் அடியில் எளிதில் மீட்கமுடியாத பகுதியில் சிக்கிக் கொண்டனர்.
இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணிக்குப் பின், மீதமுள்ள 6 பேரில் ஐவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன், ஒருவர் பிணமாக மீட்கப்பட்டிருந்தார்.
41 நாட்களின் பின்னர் மிகவும் பலவீனமாக இருந்த இவர்கள் உயிருடன் மீட்கப்பட்டதனால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கரப்பான்பூச்சி, தவளை என்று சுரங்கத்தின் அடியில் கிடைத்த பூச்சிகளையும் களிமண் தரையில் இருந்த தண்ணீரை உறிஞ்சிக் குடித்தும் இவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டுள்ளனர்.





