சர்ச்சையில் டோணி!!

421

ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டநிர்ணய விவகார சூறாவளி சுழன்று அடித்துக் கொண்டிருக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோணியும் ஒரு விவகாரத்தில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“Rhiti Sports Management” என்ற மும்பை நிறுவனம் அருண் பாண்டே என்பவருக்கு சொந்தமானது. இந்த நிறுவனம்தான் சுரேஷ் ரெய்னா, ரவீந்தர ஜடேஜா, ஓஜா மற்றும் ஆர்.பி.சிங் ஆகிய வீரர்களை நிர்வகிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. சரி இந்த ரிதி நிறுவனத்துக்கும் டோணிக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி எழுகிறது அல்லவா? ரிதி நிறுவனத்தின் உரிமையாளர் அருண் பாண்டே டோணியின் மிகவும் நெருங்கிய நண்பர்.

அதுமட்டுமின்றி இந்த நிறுவனத்தில் 15% பங்குகளை டோணி தம் வசம் வைத்தும் இருக்கிறார்.. இதுதான் இப்போது சர்ச்சை… அதாவது இந்திய அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்யும் போது தாம் 15% பங்குகளை வைத்திருக்கும் நிறுவனம் நிர்வகித்து வரும் வீரர்களுக்கு ஆதரவாகத்தானே டோணி முடிவு எடுப்பார்.. என்று கை நீட்டி குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த விவகாரத்தை கிளப்பிவிட்டவர் முன்னாள் இந்திய அணியின் வீரர் கீர்த்தி ஆசாத்தான். அவர்தான் ஊடகங்களிடம் இந்த விவகாரத்தை எடுத்துவிட்டவர். அத்துடன் இன்னொரு விடயத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் டோணி இருந்து வருகிறார். என்கிறார் கீர்த்தி ஆசாத். இதற்கு டோணி என்ன பதில் சொல்வாரோ? ஆனால் இதைவிட பெரிய பெரிய வணிக விவகாரங்கள் கிரிக்கெட்டில் கொடி கட்டிப் பறக்கின்றன அவை அனைத்தும் மறைமுகமாக நடந்தேறுகின்றன என்று கூறுவோரும் இருக்கின்றனர்.