கடற்படையினர் கெப் ரக வாகனம் ஒன்று மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ். வேலணை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் வேலணை பகுதியைச் சேர்ந்த உஷாந்தினி உதயகுமார் (வயது10) என்ற பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி வேலணை நடராஜா வித்தியாலயத்தில் தரம் 5ல் கல்வி கற்று வருகின்றார்.
இன்று காலை படசாலைக்கு வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த வேளை, வீதியை கடக்க முற்பட்ட மாணவி மீது கடற்படையினரின் வாகனம் மோதியதில் மாணவி படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த மாணவியை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியில் எடுத்து வரும் போது மாணவி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவியின் சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.





