ஐ.பி.எல் சூதாட்டத்தில் கோடிக்கணக்கில் சம்பாதித்த தாவூத் இப்ராகீம்!!

355

Dawood

நடந்து முடிந்த ஆறாவது ஐ.பி.எல் போட்டியில் சூதாட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத்சவான், அஜித் சண்டிலா ஆகியோரை டெல்லி பொலிசார் கைது செய்தனர்.

இதில் சண்டிலாவை தவிர மற்ற இருவரும் பிணையில் வெளியே வந்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யும் பணியில் டெல்லி பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த வாரம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

இதில் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கீத் சவான் மற்றும் நிழல் உலக தாதாக்கள் தாவூத் இப்ராகீம், சோட்டா ஷகில் உட்பட 29 பேரது பெயர்கள் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சட்ட விரோத ஐ.பி.எல் சூதாட்டத்தில் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகீம் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

மேலும் சூதாட்ட தரகர்களை தனது ஆட்கள் மூலம் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது அவர்கள் மூலம் வீரர்களை குறிவைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது மற்றும் கட்டண விவரத்தை தாவூத் இப்ராகீமே தனிப்பட்ட முறையில் நிர்ணயித்ததும் தெரியவந்துள்ளது.

இது குறித்து உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஐ.பி.எல் சூதாட்ட கட்டண விகிதத்தை தாவூத் இப்ராகீமே நிர்ணயித்து உள்ளான்.
இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து உள்ளான் என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் உட்பட தாவூத் இப்ராகீம் சூதாட்ட தரகர்களுடன் போனில் பேசிய பதிவுகளும் ஆதாரமாக சமர்பிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.