அடுத்த வேளை உணவுக்காக பசியுடன் காத்திருக்கும் சென்னைவாசிகள்!

542

flood-survivors-begging-for-food-afp

மழை வெள்ளத்தின் பாதிப்பால் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து வீதியில் தவிக்கும் பொதுமக்கள், யாராவது பசியை போக்க சாப்பாடு, பிரெட், பிஸ்கெட், தண்ணீர் பாக்கெட்டுகளை கொண்டு வந்து எப்போது தருவார்கள் என்றே நிவாரண முகாம்களில் குழந்தைகளுடன் கண்ணீர் மல்க காத்திருக்கிறார்கள்.

நிவாரண முகாம்களாக மாறிப்போன பள்ளிக் கூடங்களில் காலை, மதியம், இரவு என 3 வேளையும் அரசு சார்பில் சாப்பாடு வழங்கப்படுகிறது. இது தவிர தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும், உதவிகளை செய்து வருகின்றனர். முகாம்களில் தங்கி இருப்பவர்கள் பல நாட்களாக உடுத்திய உடையுடனேயே காட்சி தருவதும் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

இது தவிர தண்ணீர் தேங்கிய வீடுகளிலேயே பலர் காலத்தை ஓட்டியபடி உள்ளனர். இதுபோன்று வசித்து வருபவர்கள் வீடுகளில் சமையல் செய்ய முடியாத நிலையில், தங்களது பகுதிகளில் உள்ள வீதிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் உணவுக்காக காத்திருக்கிறார்கள். நிவாரண பொருட்களுடன் தங்கள் பகுதிகளுக்கு வரும் கார், மினிலாரி உள்ளிட்ட வாகனங்களை நோக்கி மின்னல் வேகத்தில் ஓடும் இவர்கள் முண்டியடித்துக் கொண்டு கையேந்துகிறார்கள். இதுபோன்ற காட்சிகள் கண்ணீரை வரவழைப்பதாகவே மாறிப் போய் இருக்கிறது.

சிறுவர்–சிறுமிகள் தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு சாலை யோரமாகவே அமர்ந்து சாப்பிடும் காட்சிகளும் மனதை ரணமாக்குகிறது. இப்படி பாதிப்புக்குள்ளானவர்களை பார்க்கும் போது, இப்படி ஒரு நிலைமை யாருக்கும் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஏற்பட்டு விடக்கூடாது என்றே வேண்டிக்கொள்ள தோன்றுகிறது.

மழையால் பாதிப்புக் குள்ளானவர்கள் தங்குவதற்கு பல இடங்களில் தனியார் நிறுவனங்களும் கைகொடுத்துள்ளன. 4 நாட்கள் வரை பலர் குடும்பத்தோடு ஒருசில நிறுவனங்களில் தங்கி இருந்ததையும் காண முடிந்தது. இப்படி தங்குவதற்கு இடவசதி, நிவாரண உதவி என பலர், ஜாதி மதம் பார்க்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்து கொண்டே இருக்கின்றனர். இதுபோன்ற செயல்கள் மனித நேயமும்…. மனிதாபிமானமும் இன்னும் செத்துப்போய்விடவில்லை என்பதையே உணர்த்துவதாக உள்ளது.

அதே நேரத்தில் நிவாரண முகாம்களில் தங்கி இருப்பவர்களின் முகங்களில் எப்போது வீடுகளுக்கு திரும்புவோம் என்கிற ஏக்கம் நிறைந்திருப்பதையும் காண முடிந்தது.