ஆப்கான் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு : 19 பேர் பலி!!

280

Afcan

ஆப்கானிஸ்தான் விமான நிலையம் ஒன்றில் தலிபான் பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்துக்குள் தான் இந்த தாக்குதல் நடைபெற்றது.

விமான நிலையத்திற்கு நுழந்த தலிபான்கள், ஆப்கான் இராணுவ அதிகாரிகள், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளை சேர்ந்த இராணுவ வீரர்கள் தங்கக் கூடிய குடியிருப்பு பகுதிகள் மீது நேற்றிரவு தாக்குதலில் ஈடுபட்டனர்.

விமான நிலையத்திற்குள் நுழைய முயன்ற தலிபான் பயங்கரவாதிகளை விமான நிலையத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸார் தடுக்க முயன்றனர். ஆனால், அவர்களை மீறி விமான நிலையத்தின் மையப் பகுதிக்குச் சென்ற பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்துக்கு அருகிலிருந்த இராணுவ முகாம்களில் இருந்து ஏராளமான இராணுவத்தினர் அங்கு வரவழைக்கப்பட்டனர். இராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

தலிபான்கள் ஏகே-47 ரக துப்பாக்கிகளை பயன்படுத்தியதாகவும், தாக்குதலின் போது இராணுவ உடைகளை அணிந்திருந்ததாகவும் ஆப்கான் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் 10 தலிபான்களை ஆப்கான் இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். தலிபான்களின் திடீர் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் தரப்பில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஏராளமான அப்பாவி மக்கள் இறந்திருக்க கூடும் என்று கருதப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் காந்தகர் நகரில் அடுத்தடுத்து இரண்டு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது.

முன்னதாக, காந்தகர் காவல் நிலையத்தில் திங்கட்கிழமை இரவு தலிபான்கள் தாக்குதல் ஈடுபட்டனர். அப்போது இருதரப்புக்கும் நடைபெற்ற கடுமையான துப்பாக்கிச் சூட்டில் மூன்று காவல்துறை அதிகாரிகளும், 2 தலிபான்களும் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்களுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பாகிஸ்தானில் புதன்கிழமை நடைபெறவுள்ள பிராந்தியக் கருத்தரங்கில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷரஃப் கனி பங்கேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாயின. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்தத் தாக்குதலை தலிபான்கள் நடத்தியுள்ளதாக அந்நாட்டு உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.