
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். அவுஸ்திரேலியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஹோபர்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.அதன்படி களமிறங்கிய வீரர்கள் நான்கு விக்கெட் இழப்புக்கு 583 ஓட்டங்கள் எடுத்தது.
அப்போது அவுஸ்திரேலிய வீரர்கள் ஆடம் வோக்ஸ்- ஷான் மார்ஷ் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 449 ஓட்டங்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளது. 138 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4-வது விக்கெட்டுக்கு ஒரு ஜோடியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனே-சமரவீரா ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 437 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
அதுமட்டுமின்றி அவுஸ்திரேலியாவின் டான் பிராட்மேன்- சிட் பர்ன்ஸ் ஜோடி 1946-ம் ஆண்டு சிட்னியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்டில் 5-வது விக்கெட்டுக்கு 405 ஓட்டங்கள் எடுத்ததே, அவுஸ்திரேலிய மண்ணில் ஓர் ஜோடியின் அதிகபட்சமாக இருந்தது. இந்த 69 ஆண்டு கால சாதனையை மார்ஷ்-வோக்ஸ் ஜோடி முறியடித்துள்ளது.
மேலும் ஒட்டு மொத்த அரங்கில் இது 6-வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக பதிவாகியுள்ளது.மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் எடுத்த அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் என்ற சிறப்பையும் ஆடம் வோக்ஸ் சொந்தமாக்கியுள்ளார்.





