இலங்கைக்கு போதை பொருள், ஆயுதங்கள் கடத்திய முக்கிய குற்றவாளி கைது!!

540

Arrested

இலங்கை வழியாக கஞ்சா உள்ளிட்ட பொருட்களை கடத்திய முக்கிய சந்தேகநபர் ஒருவர் தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இராமநாதபுரம் – பட்டணம்காத்தான் சோதனை சாவடி அருகில் பொலிஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட முயன்ற போது காரில் இருந்த இளைஞர் பொலிசாரை கண்டதும் தப்பி ஓடினார். அவரை விரட்டி பிடித்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது அவர் இராமேசுவரம் கிழக்கு கடைத்தெரு பகுதியை சேர்ந்த செல்வக்குமார் (வயது32) என்பது தெரியவந்தது. அவரின் காரில் இருந்து 5 கிலோ கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், செல்வக்குமார் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு தந்தைக்கு சொந்தமான விசைப்படகை பராமரித்து வந்துள்ளார். அப்போது அவரின் உறவினர் செல்வம் என்பவரின் மூலம் கடுக்காய்வலசை மனோகரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மனோகரன் அந்த காலகட்டத்தில் கள்ளத் தனமாக இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி வரும் தரகராக செயல்பட்டு வந்துள்ளார்.

இவருடைய பழக்கம் கிடைத்ததால் செல்வக்குமாருக்கும் கடத்தல் தொழிலில் ஈடுபட ஆர்வமும், அதனால் அதிக பொருள் சம்பாதிக்கவும் ஆசை ஏற்பட்டது.

இதனால் மனோகரனுடன் சேர்ந்து செல்வக்குமார் பல்வேறு போதைப்பொருள், ஆயுதங்கள் போன்றவற்றை கடத்தி வந்துள்ளார். இந்த கடத்தல் அனுபவத்தின் மூலம் நேரடியாக செல்வக்குமாரே பலமுறை இலங்கைக்கு பொருட்களை கடத்தி சென்றதோடு, இதற்காக தனக்கென விசுவாசமுள்ள நம்பிக்கையான நபர்களை உதவிக்கு வைத்து கொண்டுள்ளார்.

நாளடைவில் பல்வேறு கடத்தல் சம்பவங்களை கச்சிதமாக நிறைவேற்றிய செல்வக்குமார் கடத்தல் கும்பல் தலைவனாகவும் மாறி உள்ளார். பொலிசாரின் பல்வேறு பிரிவு அதிகாரிகளையும் சாமர்த்தியமாக ஏமாற்றி கடத்தல் தொழில் செய்து வந்த செல்வக்குமார் பொலிசாருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்துள்ளார், என தமிழக ஊடகமான மாலை மலர் செய்தி வௌியிட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ள இவர் தற்போது வரை இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கஞ்சா போன்ற போதைப் பொருட்களை சர்வ சாதாரணமாக கடத்தி வந்துள்ளார்.

கடத்தல் தொழிலில் அளவுக்கு அதிகமாக பணம் கிடைத்து வந்ததால் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெளியூர்களுக்கு சென்று தங்கியும், நடுக்கடலில் படகுகளில் சென்றும் மது அருந்தி பெண்களுடன் உல்லாசமாக இருந்து பொழுதை கழித்து வந்துள்ளார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.