வவுனியாவில் இளைஞர்கள் மது போதையில் அட்டகாசம் : கட்டிவைத்த ஊர் மக்கள்!!

832

Mathu

வவுனியாவில் மது போதையில் அட்டகாசம் விளைவித்த இளைஞர் குழுவொன்றினை ஊர் மக்கள் பிடித்துக் கட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

வவுனியா, மகாறம்பைக்குளம், சாந்தசோலை மற்றும் 4ஆம் ஒழுங்கைப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்களை அண்டிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் இளைஞர் குழுவொன்று மது அருந்தி அட்டகாசம் செய்யும் செயற்பாடு தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் 5 இளைஞர்கள் மது அருந்தி அருகில் இருந்த மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியமையால் அருகில் இருந்த வீட்டு உரிமையாளர் குறித்த அவ் இளைஞர்களை அவ்விடத்தில் இருந்து வெளியேறுமாறு கோரியுள்ளார்.

இதனையடுத்து அவர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் அக்குடிமனையில் இருந்த வீடு ஒன்றின் படலையையும் தாக்கி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஊர்மக்கள் ஒன்று திரண்டு குறித்த இளைஞர்களை விரட்டியுள்ளனர். இதன்போது இரு இளைஞர்களை பிடித்து கட்டி வைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இப்பகுதியில் தொடர்ச்சியாக இளைஞர்கள் மது அருந்திவிட்டு அட்டகாசம் செய்வதாகவும், பெண் பிள்ளைகள், சிறுவர்கள் உள்ள வீடுகள் பெரும் பாதிப்பை எதிர்கொள்வதாகவும் இப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பில் வவுனியா பொலிஸார் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மக்கள் கோரியுள்ளனர்.